இந்தியா

அமர்நாத் யாத்திரையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு ஒரு நாளைக்கு 500 பேர் அனுமதி

செய்திப்பிரிவு

காஷ்மீரில் அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான அமர்நாத் யாத்திரை ஆண்டுதோறும் ஜூன் மாதம்தொடங்கும். எனினும், கரோனாவைரஸ் அச்சுறுத்தல் காரணமாக யாத்திரை தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், யாத்திரை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவினர் காஷ்மீர் தலைமைச் செயலர் பி.வி.ஆர்.சுப்பிரமணியம் தலைமையில் இதுகுறித்து ஜம்முவில் ஆய்வு செய்தனர். இக்கூட்டத்தில் யாத்திரைக்கு ஏற்பாடுகள் செய்வது குறித்தும் நடந்து வரும் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பின்னர், தலைமைச் செயலாளர் சுப்பிரமணியம் கூறியதாவது:

இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். வழிகாட்டு விதிமுறைகள்படியே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். காஷ்மீருக்கு வருபவர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும். அவர்களுக்கு கரோனா இல்லை என்பது உறுதிப்படுத்தப்படும் வரை அவர்கள் தனியாக தங்க வைக்கப்படுவார்கள். யாத்திரைக்கு ஜம்முவில் இருந்து சாலை மார்க்கமாக ஒரு நாளைக்கு 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களுக்கு தேவையான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே, ஜூலை மாதஇறுதியில் அமர்நாத் யாத்திரையை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT