கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் குமுறும் கரோனா எரிமலையாக இருப்பதால் எந்நேரமும் கரோனா பாதிப்பு தீவிரமாகும் என்ற அமைச்சரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அங்கு ட்ரிப்பிள்(முப்பிரிவு ஊரடங்கு)லாக்டவுன் இன்று(6-ம்தேதி) முதல் ஒரு வாரத்துக்குப்பி பிறப்பிக்கப்பட்டுள்ளது
இன்று காலை 6 மணி முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும். மக்கள் அத்தியாவசியப் பணிகளுக்கு உரிய காரணத்தோடு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ திருவனந்தபுரம் நகரம் கரோனாவால் குமுறும் எரிமலையாக மாறிவிட்டது, எந்த நேரத்திலும் கரோனா பரவல் அதிகரிக்கும். சமூகப் பரவல் வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
மாவட்டம்முழுவதும் நோய் எதிர்ப்புச்சக்தி பரிசோதனையை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கட்டுப்பாடுகள் இன்னும் தீவிரமாக்கப்படும், உணவு டெலிவரி செய்யும் நபர்கள் தீவிர பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்திருந்தார்
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்குப்பின் திருவனந்தபுரத்தில் ட்ரிப்பிள் லாக்டவுன் ஒரு வாரத்துக்கு அமல்படுத்தப்படுவதாக நேற்று இரவு அரசு அறிவித்தது.
இதுகுறித்து அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில் “ திருவனந்தபுரம் நகர்புறப்பகுதிகள் வரை 6-ம் தேதி காலை முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு ட்ரிப்பிள் லாக்டவுன் கொண்டுவரப்படும். மக்கள் எந்த காரணத்தைக் கொண்டும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது.
அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் அதுவும் உரிய காரணத்தை அதிகாரிகளிடம் தெரிவித்தபின்பே அனுமதிக்கப்படுவார்கள். மருந்துகள் வாங்க வேண்டுமென்றால்கூட மருத்துவர் மருந்துசீட்டு இல்லாமல் மருந்து வாங்க மக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்
திருவனந்தபுரத்தில் நீதிமன்றங்கள் அனைத்தும் ஒருவாரத்துக்கு மூடப்படும். பொதுப்போக்குவரத்து ரத்து செய்யப்படும். மருந்துக் கடைகள், பலசரக்கு கடைகள், மருத்துவமனைகள் மட்டுமே இயங்கும்.தலைமைச் செயலகம், அரசு அலுவலகங்கள் அனைத்தும் ஒருவாரத்துக்கு மூடப்படும்
தேவையின்றி வெளியே சுத்தும் மக்கள்மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் தனிமை மூகாமுக்கு 14 நாட்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
லாக்டவுன் காரணமாக பல்கலைக்கழத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
கேரள மாநிலத்தில் கரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாட்டுக்கள் வந்த நிலையல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபின் நாள்தோறும் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. அதிகபட்சமாக இதுநாள்வரை இல்லாத வகையில் நேற்று 240 பேர் பாதிக்கப்பட்டனர்.
திருவனந்தபுரத்தில்மட்டும் 16 பேர் கரோனா பாஸிட்டிவ் இருந்தது. மாநிலத்தின் ஒட்டுமொத்த கரோனா எண்ணிக்கையும் 5 ஆயிரத்தைக் கடந்தது.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் கடந்த மாதம் 25ம் தேதி 77 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 109 ஆக அதிகரித்துள்ளது. 13 ஆயிரத்து 513பேர் கண்காணிப்பில் உள்ளனர். 256 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் திருவனந்தபுரத்தில் திடீர் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது