ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாசுதீன் ஓவைஸி கரோனா வைரஸ் பெருந்தொற்று விவகாரத்தைக் கையாண்ட விதம், லாக் டவுன் உள்ளிட்டவை பற்றி பிரதமர் மோடி மீது விமர்சனம் வைத்தார். யோகி ஆதித்யநாத் அரசையும் ஓவைஸி சாடினார்.
ஹைதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓவைஸி, “அரசியலமைப்புக்கு விரோதமான, திட்டமிடப்படாத லாக்-டவுன் மூலம் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இவரது திட்டமிடப்படாத லாக்டவுனினால் சுமார் 10 கோடி பேர் வேலையிழந்தனர். மக்களின் வருவாய் குறைந்தது. சுமார் 150 புலம்பெயர் தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளனர். மோடியின் சேவை எங்கு போயிற்று?
பலகோடி பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது, புலம் பெயர் தொழிலாளர்கள் உயிரை விட்டுள்ளனர், அப்போது எங்கு சென்றது இவரது சேவை?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் உ.பி.யில் ரவுடி விகாஸ் துபேயின் கும்பல் 8 போலீஸாரை சுட்டுக் கொன்றது பற்றி யோகி ஆதித்யநாத் அரசு மீது கடும் விமர்சனங்களை முன் வைத்த ஓவைஸி, “கான்பூரில் நடந்தவற்றுக்கு முதல்வர் யோகிதான் பொறுப்பு
என்கவுண்டர் என்ற பெயரில் பல கொலைகளைச் செய்ததே இதற்குக் காரணம். அவரது என்கவுண்டர் கொள்கையை அவர் மாற்றிக் கொள்ள இதுதான் நேரம். ஒரு அரசை துப்பாக்கி ராஜ்ஜியமாக நடத்த முடியாது. அரசமைப்பு விதிகள், சட்டம் போன்றவற்றின் மூலமே அரசை நடத்த முடியும்.
இப்போதும் கூறுகிறேன் விகாஸ் துபேயை கைது செய்ய வேண்டுமே தவிர மீண்டும் அவரை என்கவுண்டர் செய்தால் விகாஸ் துபேவுக்கும் அரசுக்கும் வித்தியாசமில்லாமல் போய் விடும்” என்றார் ஓவைஸி.