கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், அதனால் ஏற்படும் பாதிப்பு களைக் கருத்தில் கொண்டு வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நவ.30-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக வருமானவரித் துறை நேற்று வெளியிட்ட அறி விக்கையில், ‘‘2019-20ம் நிதி ஆண்டு மற்றும் மதிப்பீட்டு ஆண்டு 2020-21-க்கான ரிட்டர்ன் தாக்கல் கால அவகாசம் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள ட்விட் டர் பதிவில், ‘‘இன்னும் பல மாநிலங்களில் ஊரடங்கு பகுதி யளவில் கடைபிடிக்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டே வருமான வரி ரிட்டர்ன் படிவம் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018-19-ம் நிதி ஆண்டுக்கு ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜூலை 31-ம் தேதி வரை வருமான வரித்துறை ஏற்கெனவே நீட்டித்துள்ளது குறிப் பிடத்தக்கது. இதனால் திருத்திய ரிட்டர்ன் படிவத்தையும் ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய் வதற்கான வாய்ப்பை வரி செலுத்துவோருக்கு வருமானவரித் துறை வழங்கியுள்ளது.
தவிர வருமானவரி செலுத்து வோர் இம்மாதம் 31-ம் தேதி வரை மேற்கொள்ளும் முதலீடுகளுக்கும் வரிவிலக்கு கோரலாம். இதன்படி, வருமான வரி விலக்கு பிரிவு 80-சி பிரிவின் கீழ் எல்ஐசி, பிபிஎப், என்எஸ்சி உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்படும் முதலீடு களுக்கு விலக்கு பெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல வரி பிடித்தம் (டிடிஎஸ்)வரி வசூலிப்பு (டிசிஎஸ்) ஆகியவை குறித்த விவரங்களை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.