இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உட்பட 10 பேருக்கு கரோனா தொற்று

என்.மகேஷ்குமார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உட்பட 10 பேருக்குகரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் விதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில்கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதிமுதல் ஜூன் மாதம் 10-ம் தேதி வரைதொடர்ந்து 82 நாட்களுக்கு பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் கோயிலில் சுவாமிக்கு வழக்கம்போல் பூஜைகள் ஆகம சாஸ்திரங்களின்படி நடைபெற்று வந்தன. இந்நிலையில், மத்திய அரசின் அனுமதிக்குப் பிறகு கடந்த ஜூன் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் உள்ளூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

அதன் பின்னர், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜூன் 11-ம் தேதி முதல் தினமும் 6,500 பக்தர்கள் வீதம் சுவாமியை தரிசிக்க தொடங்கினர். படிப்படியாக பக்தர்களுக்கான அனுமதி அதிகரிக்கப்பட்டு, தற்போது தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் வரை ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில், சித்தூர் மாவட்ட ஆட்சியர் நாராயண பரத் குப்தா சித்தூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளித்த பிறகு, கரோனா பரவமால் தடுக்கதேவஸ்தானம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அலிபிரி மலைப்பாதையில் உள்ள சோதனைச் சாவடியில் வாகனங்கள் மீதும், பக்தர்கள் மீதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. அனைத்து பக்தர்களுக்கும் தெர்மல் பரிசோதனை செய்யப்படுகிறது. முகக் கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் செல்லும்போது பக்தர்கள் அறைகளில் அடைக்கப்படாமல் நேரடியாக தரிசனத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இதில் சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், தேவஸ்தான ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் தினமும் 100 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

எனினும், தற்போது திருமலையில் பணியாற்றும் அர்ச்சகர், நாதஸ்வர கலைஞர்கள், கண்காணிப்பு ஊழியர்கள் என மொத்தம் 10 பேருக்கு கரோனா வைரஸ்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் இதுவரை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. திருப்பதி உட்பட சித்தூர் மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வருவதால்ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படுமா என சிலர் கேட்கின்றனர். மத்திய, மாநில அரசுகளின் நிபந்தனைகளை முழுமையாக பின்பற்றி வருகிறோம். எனவே, தற்போது ஊரடங்கு அமல்படுத்தும் எண்ணம் இல்லை" என்றார்.

இதுகுறித்து ஆலோசிக்க திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர்ஒய்.வி. சுப்பாரெட்டி தலைமையில் அறங்காவலர் குழு கூட்டம் நடத்தப்படும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT