இந்தியா

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஜூன் மாதம் 2,043 ஆக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்துக்கு கடந்த ஜூன் மாதம் 2,043 புகார்கள் வந்துள்ளன. இது முந்தைய 8 மாதங்களில் மிக அதிகமாகும்.

இதுதொடர்பான புள்ளிவிவரத்தை தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த ஜூன் மாதம் மொத்தம் 2,043 புகார்கள் வந்துள்ளன. இதில் அதிக புகாராக, கண்ணியத்துடன் வாழும் உரிமையின் கீழ் 603 புகார்கள் வந்துள்ளன. குடும்ப வன்முறை தொடர்பாக 452 புகார்கள் வந்துள்ளன. வரதட்சணை கொடுமை 252, பாலியல் தொந்தரவு 194, போலீஸ் அடக்குமுறை 113, சைபர் குற்றங்கள் 100, பலாத்கார முயற்சி 78, பாலியல் துன்புறுத்தல் 38 என புகார்கள் வந்துள்ளன.

இதுகுறித்து மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா கூறும்போது “ சமூக ஊடக தளங்களில் மகளிர் ஆணையத்தின் செயல்பாடு அதிகரித்துள்ளதால் புகார்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் இருந்தும் நாங்கள் புகார்களை பெறுகிறோம். புகார்களுக்காக தற்போது வாட்ஸ்-அப் எண் வெளியிட்டுள்ளோம். நாங்கள் உதவி செய்வது அறிந்து, எங்கள் மீது நம்பிக்கை வைத்து பெண்கள் பலர் எங்களை அணுகி வருகின்றனர். எங்களின் சமூக ஊடக செயல்பாடு காரணமாகவே எங்களிடம் குடும்ப வன்முறை தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளன. வாட்ஸ்-அப் எண்ணில் எங்களை அணுகுவது பெண்களுக்கு எளிதாக உள்ளது. பெண்கள் நலனுக்காகவும் அவர்கள் அதிகாரம் பெறுவதற்காகவும் மகளிர் ஆணையம் செயல்பட்டு வருகிறது. எனவே பெண்கள் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் எங்களை அணுகலாம்” என்றார்.

SCROLL FOR NEXT