இந்தியா

கரோனா வைரஸ் பரவல் எதிரொலி: சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு ஜூலை 31-ம் தேதி வரை தடை நீடிப்பு

செய்திப்பிரிவு

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு இம்மாதம் 31-ம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

முந்தைய உத்தரவில் இம்மாதம் 15-ம் தேதி வரை தடை நீடிப்பதாக இருந்தது. அது தற்போது ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையில் விமானங்கள் செல்லும் வழிகளின் எண்ணிக்கை 33 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக உயர்த்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மார்ச் 23-ம் தேதியில் இருந்து சர்வதேச விமானபோக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் அர்விந்த் சிங் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகளிடையே விமானப் போக்குவரத்தை தொடங்குவது குறித்து நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் தற்போது இம்மாத இறுதி வரை பன்னாட்டு விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிப்பதில்லை என அமைச்சகம் நேற்று முடிவு செய்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சீனா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம்உள்ளிட்ட நாடுகளில் விமானப் போக்குவரத்து சேவை 3 சதவீதம்முதல் 18 சதவீத அளவுக்கே உள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

தற்போதைய கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளுக்கு வழக்கம் போல விமானப் போக்குவரத்து சேவையை மேற்கொள்ள முடியாது. அந்நாடுகளுடன் பேச்சு நடத்தி, அங்கு நிலவும் சூழ்நிலை, பன்னாட்டு பயணிகளை அனுமதிக்கிறதா என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT