உத்திரப்பிரதேசம் அலிகர் நெடுஞ்சாலையில் வரும் பயணிகளிடம் நேற்று பவாரியா கும்பல் கொள்ளைக்கு முயன்றுள்ளது. அப்போது அக்கும்பலுடன் போலீஸாருக்கு நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் அக்கும்பலின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
உ.பி.யின் கான்பூரில் முக்கிய கிரிமினல் கும்பலை பிடிக்கச் சென்ற அம்மாநிலக் காவல்துறையின் 8 போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதில் டிஎஸ்பி, ஆய்வாளர் உள்ளிட்டோரும் கிரிமினல்களால் திட்டமிட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நேற்று இரவு நிகழ்ந்த இந்த சோகத்திற்கு இடையே அலிகரிலும் பவாரியா கொள்ளை கும்பலுடன் உ.பி. போலீஸாருக்கு துப்பாக்கி சண்டை நடைபெற்றுள்ளது. இதில், கொள்ளைக் கும்பலின் தலைவன் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வட மாநிலங்களின் நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர் வாகனங்களை மறித்து கொள்ளை அடிப்பதில் பவாரியா என்றழைக்கப்படும் கும்பல் பிரபலம். அதில் உள்ள பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி விடுவதும் அவர்கள் வழக்கம்
இவர்களில் முக்கியமான ஒரு கும்பலின் தலைவனான பப்ளு(38), ஹரியாணாவின் பரிதாபாத்தை சேர்ந்த ராம்பால் என்பவரின் மகன். நெடுஞ்சாலைகளில் வரும் வாகனங்களை பஞ்சராக்கி மடக்கி வழிப்பறி செய்து தப்புபவர்களை பிடிக்க முயலும் போலீஸாரை கொடூரமாக தாக்குவது உண்டு.
கடந்த 2014 முதல் அலிகர் போலீஸாரால் தேடப்பட்டு வந்த பப்ளுவின் தலைக்கு ரூ.50,000 பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. கொலை, கொள்ளை மற்றும் பாலியியல் வல்லுறவு உள்ளிட்ட எட்டு வழக்குகளில் பப்ளு தேடப்பட்டு வந்தார்.
கடைசியாக கடந்த அக்டோபரில் அலிகர் நெடுஞ்சாலையில் வந்த ஒரு சொகுசு வாகனப் பயணிகளிடம் பப்ளு கும்பல் ரூ.8 லட்சம் கொள்ளையடித்தது. அதன் பிறகு தலைமறைவானவர்கள் உ.பி.யின் மற்ற மாநில எல்லைகளில் கொள்ளைகளை தொடர்ந்தது.
இந்நிலையில், நேற்று இரவு பப்ளு கும்பலின் நடமாட்டம் குறித்த தகவலறிந்த அலிகர் மாவட்ட கண்காணிப்பாளரும், தமிழருமான ஜி.முனிராஜுக்கு கிடைத்தது. இதையடுத்து அவர் ஹரியாணா எல்லையிலுள தப்பல் நெடுஞ்சாலையில் போலீஸார் மற்றும் உபி அதிரடிப்படையினரை அனுப்பி வைத்தார்.
முன்னதாக சென்று மறைந்திருந்து பவாரியா கும்பலை போலீஸார் சுற்றி வளைத்தனர். இருவருக்குள் இன்று விடியலில் 3.00 மணி அளவில் சுமார் அரை மணி நேரம் துப்பாகி சண்டை நடைபெற்றது.
அதில், போலீஸாரின் துப்பாக்கி குண்டுகளால் கும்பலின் தலைவன் பப்ளு சுட்டுக் கொல்லப்பட்டார். மற்ற ஐந்து கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் ஐபிஎஸ் அதிகாரியான ஜி.முனிராஜ் கூறும்போது, ‘‘தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இக்கும்பல் கொள்ளையடித்து வந்ததாக தகவல் உள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக ராஜஸ்தான், ஹரியாணா, உ.பி. எல்லைகளில் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டது.
கடந்த 2014 இல் அருகிலுள்ள புலந்த்ஷெஹரின் நெடுஞ்சாலை பயணிகளை மறித்து கற்பழிப்புடன், கொள்ளையடித்து தப்பிய வழக்கில் சம்மந்தப்பட்டவர் இந்த பப்ளு. இந்த கும்பலை சேர்ந்தவர்கள் உயிருடன் பிடிக்கப்பட்டாலும் அவர்களிடம் தகவல்களை பெற முடியாது.’’ எனத் தெரிவித்தார்.
உ.பி. முதல்வராக யோகி ஆதித்யநாத் அமர்ந்தவுடன் கிரிமினல்கள் மீதான என்கவுன்டர்களை முதன்முதலாக துவக்கி வைத்தவர் அதிகாரி முனிராஜ். அப்போது புலந்த்ஷெஹர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராகவும் இருந்தவர் ’உபி சிங்கம்’ என அம்மாநிலவாசிகளால் பாராட்டப்படுபவர்.