இந்தியா

டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 2,500 வெளிநாட்டினரின் விசா ரத்து தொடர்பாக தனித்தனி உத்தரவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

செய்திப்பிரிவு

தப்லீக் ஜமாத் அமைப்பின் வெளிநாட்டு உறுப்பினர்கள் 2,500-க்கும் மேற்பட்டோரை கறுப்புப் பட்டியலில் சேர்த்து, அவர்களின் விசாக்களை ரத்து செய்துள்ளது தொடர்பாக தனித்தனி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று தெரிவித்தது.

தப்லீக் ஜமாத் அமைப்பு சார்பில் டெல்லியில் கடந்த மார்ச் மாதம் மத மாநாடு நடைபெற்றது. இதில் வெளிநாட்டு உறுப்பினர்களும் பங்கேற்றனர். சுற்றுலா விசாவில் வந்த இவர்கள், மத நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக இவர்கள் 10 ஆண்டுகள் இந்தியா வரத் தடை விதிக்கும் வகையில் இவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்த்தும், விசாக்களை ரத்து செய்தும் மத்திய அரசு உத்தரவிட்டது.

இதனால் பாதிக்கப்பட்ட 34 பேர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவர்களின் மனு கடந்த 29-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், “வெளிநாட்டு தப்லீக் உறுப்பினர்களுக்கு எதிராக 11 மாநிலங்களில் 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 9 வெளிநாடு வாழ் இந்தியர் உட்பட 2,679 வெளிநாட்டினரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 2,765 பேர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். 1,906 வெளிநாட்டு தப்லீக் உறுப்பினர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. லுக் அவுட் நோட்டீஸ் அல்லது கறுப்புப்பட்டியல் நடவடிக்கைக்கு முன்னதாக 227 பேர் நாட்டை விட்டுச் சென்றுவிட்டனர். விசா ரத்து தொடர்பாக சுமார் 1500 பேருக்கு ஒரு வரி இமெயில் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் விளக்கம் கோரும் நோட்டீஸ் பிறப்பிக்கப்படவில்லை” என்று கூறப்பட்டது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடும்போது, “விசா பெறுவதை இவர்கள் தங்களின் உரிமையாக கோர முடியாது. இவர்கள் கறுப்புப் பட்டியலில் மட்டும் சேர்க்கப்படவில்லை. இவர்களுக்கு எதிராக குற்ற வழக்கும் உள்ளது. வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படும்” என்றார்.

இதையடுத்து மத்திய அரசின் விளக்கத்துக்கு மனுதாரர்கள் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 10-ம் தேதி தள்ளி வைத்தனர். மேலும் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக உரிய அமைப்பிடம் முறையிடலாம் என்றும் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT