இந்தியா

20 பெண்களை சயனைடு கொடுத்து கொன்ற மோகன் குமார் குறித்து திரைப்படம் தயாராகிறது

செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மோகன் குமார் (56), திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 20 பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் கருக்கலைப்பு மாத்திரை எனக் கூறி சயனைடு மாத்திரையை கொடுத்து கொலை செய்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான 20 வழக்குகளில் 5-ல் மோகன் குமாருக்கு தூக்கு தண்டனையும், 4 வழக்குகளில் ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கன்னட திரைப்பட இயக்குநர் ராஜேஷ் தௌச்ரிவர் மோகன் குமாரின் வாழ்க்கையை திரைப்படமாக இயக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து ராஜேஷ் கூறும்போது, "மோகன் குமார் 6 ஆண்டுகளில் 20 பெண்களை சயனைடு கொடுத்து ஒரே பாணியில் தொடர்ச்சியாக கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் வெளிவந்தபோதே இதுகுறித்து திரைப்படம் எடுக்க வேண்டும் என முடிவெடுத்தேன். நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்ததால் உடனடியாக தயாரிப்பில் ஈடுபட முடியவில்லை. கடந்த வாரம் அனைத்து வழக்குகளின் விசாரணையும் முடிந்து தீர்ப்பு வெளியாகியுள்ளது. எனவே உரிய அனுமதி பெற்று மோகன் குமாரின் வாழ்க்கையை படமாக்க முடிவெடுத்துள்ளேன். ‘சயனைடு’ என்ற பெயரில் கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய 4 மொழிகளில் படம் வெளியாகும்” என்றார்.

SCROLL FOR NEXT