இந்தியா

சிஆர்பிஎப், பிஎஸ்எப் உட்பட 5 துணை ராணுவப் படைகளில் 3-ம் பாலினத்தவருக்கு அதிகாரி பணியிடம்- மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலனை

செய்திப்பிரிவு

சிஆர்பிஎப் போன்ற துணை ராணுவப் படைகளில் 3-ம் பாலினத்தவருக்கு அதிகாரி பணியிடங்கள் வழங்குவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

3-ம் பாலினத்தவரின் உரிமைகளைப் பாதுகாக்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த சட்டத்தின்படி துணை ராணுவப் படைகளில் 3-ம் பாலினத்தவருக்கு பணியிடங்கள் வழங்குவது தொடர்பாக உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்காக மத்திய அரசின் 5 துணை ராணுவப் படைகளிடமும் கருத்துகளைக் கேட்டுள்ளது. இதன்மூலம் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளில் 3-ம் பாலினத்தவரை சேர்க்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு சார்பில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்), எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்), மத்திய தொழிலக பதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்), இந்தோ-திபெத் எல்லை போலீஸ்(ஐடிபிபி), சஹஸ்த்ர சீமா பால்(எஸ்எஸ்பி) ஆகிய 5 துணை ராணுவப் படைகள் உள்ளன. இந்த 5 துணை ராணுவப் படைகளில் அதிகாரி பணியிடங்கள் வழங்குவது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மத்திய ஆயுத போலீஸ் படையின் மூத்த கமாண்டர் ஒருவர் கூறியதாவது:

3-ம் பாலினத்தவரை அதிகாரிகள் நிலையில் பணியமர்த்தும் போது ஏற்படும் சவால்கள் மற்றும்வாய்ப்புகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மத்திய ஆயுதப் படைகளில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் கான்ஸ்டபிள், அதிகாரிகள் நிலையில் சேர்க்கப்பட்டனர். தற்போது மத்திய துணை ராணுவப் படைகளில் 3-ம் பாலினத்தவரை சேர்க்கும் போது அது அந்தப் படைகளின் தரத்தை மேலும் அதிகரிக்கும்.

நாட்டின் சிறந்த படைகளாக விளங்கும் துணை ராணுவப் படைகளே எடுத்துக்காட்டாக இல்லாவிட்டால், சமுதாயத்தில் உள்ள பிற பிரிவுகளில் உள்ள தடையை யார் அகற்றுவார்கள் என எதிர்பார்க்க முடியும்? துணை ராணுவத்தில் 3-ம் பாலினத்தவரை சேர்க்கும் போது தொடக்கத்தில் சில பிரச்சினைகள் வரலாம். ஆனால் இந்தப் படைகளில் பெண்கள் இணைந்து சிறப்பாக பணியாற்றும் போது, 3-ம் பாலினத்தவரும் சிறப்பாக பணியாற்ற முடியும்.

இவ்வாறு மூத்த கமாண்டர் கூறினார்.

மூன்றாம் பாலினத்தவரை துணை ராணுவப் படைகளில் சேர்ப்பதற்கு ஒப்புதல் தரப்பட்ட பின்னர், யுபிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் பாலினப் பிரிவில் ஆண், பெண்ணுடன், 3-ம் பாலினத்தவரும் சேர்க்கப்படுவர் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT