பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ள கரோனில் மருந்து நோய் எதிர்ப்புச் சக்தி மருந்துதான். அதை விற்கத் தடையில்லை. ஆனால், கரோனா வைரஸைக் குணப்படுத்தும் மருந்து என விற்க முடியாது என்று ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பதஞ்சலி நிறுவனத்தின் இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோர் கரோனா நோய்க்கு தங்கள் நிறுவனம் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சமீபத்தில் அறிவித்து கரோனில் எனும் பெயரில் மருந்தை அறிமுகப்படுத்தினர். இந்த ஆயுர்வேத மருந்தை உட்கொண்டால் 7 நாட்களில் கரோனா நோய் குணமடையும் என்று பதஞ்சலி நிறுவனம் அறிவித்தது.
இந்த மருந்தை நூற்றுக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளுக்கு அளித்துப் பரிசோதித்ததில் அவர்கள் நோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்ததாகவும் பாலகிருஷ்ணா தெரிவித்தார்.
ஆனால், இதற்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்தது. பதஞ்சலி நிறுவனம் கரோனா நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளது என்றால், அதுகுறித்த தகவல்களை அமைச்சகத்துக்கு அனுப்பி அதைப் பரிசோதித்து உண்மையானதுதானா என ஆய்வு செய்தபின்புதான் விளம்பரம் செய்ய வேண்டும்.
ஆனால், எந்தத் தகவலையும் அனுப்பாமல் விளம்பரம் செய்யக்கூடாது, அறிவிக்கக் கூடாது. உடனடியாக மருந்து குறித்த தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவித்தது.
பொய்யான விளம்பரம் அளித்து மக்களை ஏமாற்றியதாக பாபா ராம்தேவ், பதஞ்சலி நிறுவனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் மீது ஜெய்ப்பூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.
இந்நிலையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் பதஞ்சலி நிறுவனம் தயாரித்த கரோனில் மருந்து குறித்து அறிவிப்பு வெளியிட்டது.
அதில், ''பதஞ்சலி நிறுவனம் தயாரித்த கரோனில் மருந்தை விற்பனை செய்வதில் எந்தவிதமான தடையும் இல்லை. அந்த மருந்து மனித உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும் மருந்து மட்டும்தான். ஆனால், கரோனா வைரஸைக் குணப்படுத்தும் மருந்து அல்ல” எனத் தெரிவித்தது.
இதற்கிடையே யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று ஹரித்துவாரில் கூறுகையில், “மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கும் பதஞ்சலி நிறுவனத்துக்கும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. கரோனில் மருந்தை விற்க அனுமதியளித்துவிட்டது. இன்று முதல் இந்த மருந்து அனைத்துக் கடைகளிலும் கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே பதஞ்சலி நிறுவனம் கரோனாவைக் குணப்படுத்தும் மருந்து என பொய்யான தகவலைக் கூறி கரோனில் மருந்தை விற்க முயல்கிறது என்று உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ரமேஷ் ரெங்கநாதன், நீதிபதி ஆர்சி குல்பே ஆகியோர் பதஞ்சலி நிறுவனம், மத்திய அரசு, உத்தரகாண்ட் அரசு ஆகியவை ஒருவாரத்துக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மேலும், ஐசிஎம்ஆர், ஜெய்ப்பூரில் உள்ள தனியார் ஆய்வகமான தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்