காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி: கோப்புப்படம் 
இந்தியா

டெல்லி அரசு இல்லத்தை பிரியங்கா காந்தி ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும்: மத்திய அரசின் உத்தரவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

பிடிஐ

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்டிருந்த எஸ்பிஜி பாதுகாப்பு கடந்த ஆண்டு வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து, அவர் டெல்லியில் தங்கியிருக்கும் அரசுக் குடியிருப்பை ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது.

இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இது மோடி அரசின் வெறுப்பு மற்றும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இதற்குப் பணிந்து சென்றுவிட மாட்டோம் என்று விமர்சித்துள்ளது.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர விவகாரத்துறை நேற்று வெளியிட்ட உத்தரவில், “ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டெல்லியில் உள்ள தனது அரசுக் குடியிருப்பைக் காலி செய்யவேண்டும். அவ்வாறு அவர் காலி செய்யாவிட்டால் அதற்காக அபராதம் அல்லது, வாடகை இதில் எதுவேண்டுமானாலும் வசூலிக்கப்படும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கப்பட்டு, சிஆர்பிஎப் இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது.

எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கப்பட்டு, இசட் பிளஸ் பாதுகாப்பாகக் குறைக்கப்பட்ட ஒருவருக்கு அரசின் சார்பில் வீடு வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை. ஆதலால், டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள எண் 35, 5பி இல்லத்தை பிரியங்கா காலி செய்ய வேண்டும். ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் வீட்டைக் காலி செய்து தர வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் அல்லது வாடகை வசூலிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு இந்த வீடு கடந்த 1997-ம் ஆண்டு மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. ஏறக்குறைய 23 ஆண்டுகள் இந்த இல்லத்தில் வாடகை கொடுக்காமல் பிரியங்கா காந்தி தங்கியிருந்தார். எஸ்பிஜி பாதுகாப்பு குறைக்கப்பட்ட ஒருவருக்கு அந்தக் காலகட்டத்தில் கிடைத்த சலுகையான அரசுக் குடியிருப்பை ஒதுக்க இடமில்லை. ஆதலால் வீட்டைக் காலி செய்ய உத்தரவிடப்பட்டது” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் கூறுகையில், “ இதுபோன்ற மத்திய அரசின் நோட்டீஸ்களால் எங்கள் கட்சி பயந்துவிடாது. மோடி அரசின் தவறான செயல்பாடுகளைத் தொடர்ந்து நாங்கள் மக்களிடம் எடுத்துரைப்போம்.

பிரதமர் மோடியும் அவரின் அரசும் வெறுப்பு, பழிவாங்கும் எண்ணத்துடன் காங்கிரஸ் தலைவர்களை அணுகுகிறது. உத்தரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்தியின் தீவிரமான அரசியலைப் பார்த்து மிரண்டு அதற்கு முட்டுக்கட்டை போட இதுபோன்ற செயலில் பாஜக அரசு ஈடுபடுகிறது.

இதுபோன்ற சோர்வைத்தூண்டும் முயற்சிகள் எங்களைப் பாதிக்காது. உத்தரப் பிரதேச அரசின் தோல்விகளைத் தொடர்ந்து பிரியங்கா மக்களிடம் கொண்டு செல்வார். இந்திரா காந்தியின் பேத்தி பிரியங்கா காந்தி. அவரோ அல்லது காங்கிரஸ் தலைமையோ இதுபோன்ற நோட்டீஸ்களுக்குப் பணிந்துவிடமாட்டோம்” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT