மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்ட, பெல் மற்றும் அக்வா வென்டிலேட்டர் மாதிரிகள், வல்லுநர் குழுவின் தரநிலைகளின்படிதான் இருக்கின்றன என மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது:
மத்திய அரசு விநியோகித்த வென்டிலேட்டர்களில், பைலெவல் பாசிட்டிவ் ஏர்வே ப்ரெஷர் எனப்படும் இரண்டு வேறுபட்ட அழுத்தங்களை பராமரிக்கும் வசதி இல்லை என்று வந்துள்ள செய்திகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்துள்ளன. மாநிலங்கள் மற்றும் டெல்லி தலைநகர பிராந்தியம் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் விநியோகிக்கப்பட்ட “மேக் இன் இந்தியா” வென்டிலேட்டர்கள், அவசர சிகிச்சைப் பிரிவுக்கானவை.
கொவிட் வென்டிலேட்டர்களுக்கான தொழில்நுட்ப தரநிலைகளை, இந்த அமைச்சகத்தின் சுகாதாரப் பணிகளுக்கான தலைமை இயக்குநர் தலைமையிலான வல்லுநர்கள் அடங்கிய தொழில்நுட்பக் குழு நிர்ணயித்தது. அதன்படி வென்டிலேட்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டன. வாங்கப்பட்ட, விநியோகிக்கப்பட்ட வென்டிலேட்டர்கள் இந்த தரநிலைகளின்படிதான் உள்ளன.
மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்ட, பெல் மற்றும் அக்வா வென்டிலேட்டர் மாதிரிகள், வல்லுநர் குழுவின் தரநிலைகளின்படிதான் இருக்கின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, சிக்கன விலையிலான வென்டிலேட்டர்களில் இருவேறு அழுத்தத்தை நிர்ணயிக்கும் வசதி, தொழில்நுட்ப தரநிலைகளின்படி உள்ளது.
வென்டிலேட்டர்கள், பயன்பாட்டாளர்களுக்கான கையேடு மற்றும் உபகரணத்தைப் பற்றிய கருத்தறியும் படிவங்களுடன் அளிக்கப்பட்டுள்ளன. ஏதேனும், ஐயம் இருப்பின், இவற்றைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.