சாலை விபத்தில் சிக்குவோர் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில், விபத்தில் சிக்கும் ஒவ்வொருவருக்கும் ரூ.2.50 லட்சம் வரையில் பணமில்லாமல் இலவச சிகிச்சையளிக்கும் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
உலகளவில் மிக அதிகமாக இந்தியாிவல் ஆண்டுதோரும் 5 லட்சம் சாலை விபத்துக்கள் நடக்கின்றன, 1.50 லட்சம் பேர் சாலை விபத்துகளில் மட்டும் உயிரிழக்கின்றனர், 3 லட்சம் பேர் உடல்உறுப்புகளை இழந்து பாதி்கப்படுகின்றனர். இதைத் தடுக்கும் வகையில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இந்த திட்டத்துக்காக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் மோட்டார் வாகன விபத்து நிதி என்று புதிதாக உருவாக்க உள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில போக்குவரத்து செயலாளர்கள், ஆணையர்களுக்கும் கடிதம் எழுதி, இந்த நிதியம் உருவாக்க ஆணையிட்டு கடிதம் எழுதியுள்ளது.
பிரதமரின் காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜானா திட்டத்தை தேசிய சுகாதார ஆணையம்தான் செயல்படுத்தி வருகிறது. இந்த தேசிய சுகாதார ஆணையமே சாலை விபத்தில் சிக்கும் ஒவ்வொருவருக்கும் சிகிச்சைக்கான நிதியை அளி்க்க உள்ளது.
அதாவது சாலைவிபத்தில் சிக்குவோரின் உயிர்காக்கும் முதல் ஒரு மணிநேர சிகிச்சைக்கான(கோல்டன் ஹவர்) செலவுத்தொகை ஏற்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த திட்டத்தின் கீழ் சாலை விபத்தில் சிக்கும் இந்தியர்கள் மட்டுமின்றி, சுற்றுலா வரும் வெளிநாட்டினர் கூட சாலை விபத்தில் சிக்கினால் அவர்களும் திட்டத்தில் பயன் பெறுவார்கள். இந்த திட்டத்தின் படி ஒரு விபத்தில், ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் செலவு செய்யப்படும் என அறிவிப்பி்ல தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தத் திட்டத்தின் கீழ் சாலை விபத்தில் சிக்குவோருக்கு வழங்கப்படும் அவசர சிகிச்சை மற்றும் அதன்பின் நடக்கும் சிகிச்சைக்கான செலவுக்கான பணம் வங்கிக்கணக்கு மூலம் சாலைப்போக்குவரத்து அமைச்சகம், காப்பீடு நிறுவனங்கள் மூலம் பரிமாற்றம் செய்யப்படும்.
இந்த நிதியுதவி சாலைப்போக்குவரத்து அமைச்சகம் நேரடியாக வழங்காமல் காப்பீடு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும். காப்பீடு செய்யப்படாத வாகனங்கள் மோதியிருந்தால் அதற்கான தொகையை மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் வழங்கும்.
அதேசமயம், விபத்தை ஏற்படுத்திய வாகன உரிமையாளர்களும், காப்பீடு செய்யப்படாத வாகனங்களை வைத்திருந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்கான செலவை ஏற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரதமர் காப்பீடு திட்டம் 32 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது, 13 கோடி குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், சாலை விபத்தில் சிக்குவோருக்கு அவசரசிகிச்சை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் கட்டணமின்றி கிடைக்கும்,உயிரும் காக்கப்படும்.
சிகிச்சையளிக்கும் மருத்துவமனை பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காத்தபின், அவரை பிரதமர்காப்பீடு திட்டம் செயல்படுத்தியுள்ள மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு பரிந்துரைக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது