இந்தியா

எங்கள் செயலிகளைத் தடை செய்தது இந்திய ஊழியர்களின் வேலை வாய்ப்பை பாதிக்கும்: சீன தூதரகம்

செய்திப்பிரிவு

டிக் டாக், யுசி பிரவுசர், வெய்போ உள்ளிட்ட சீனாவின் 59 செயலிகளைப் பயன்படுத்த மத்திய அரசு அதிரடி தடை விதித்ததால் அது இந்திய உள்நாட்டு ஊழியர்களின் வேலைவாய்ப்பையே பாதிக்கும் என்று சீன முதலாளிகள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக சீன தூதரக செய்தித் தொடர்பாளர் தன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தச் செயலிகளுக்கு இந்தியாவில் பெரிய அளவில் பயனாளர்கள் உள்ளனர். இந்திய சட்ட திட்டங்களின் படிதான் நடத்தப்பட்டு வந்தன. இந்திய நுகர்வோருக்கு வேகமாக சேவையாற்றி வந்தன இந்தச் செயலிகள்.

எனவே இந்திய அரசின் இந்தத் தடையினால் இந்திய ஊழியர்களின் வேலைவாய்ப்பும் வாழ்வாதாரமுமே பாதிக்கப்படும். மேலும் இதை உருவாக்கியவர்கள் மற்றும் முதலாளிகளுக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், என்றார்.

ஆப் தடை குறித்து சீனாவின் முதல் எதிர்வினை, “சீரியஸாக கவலையடைந்துள்ளோம்” என்றது. இந்தியாவின் இந்த நடவடிக்கை தேற்ந்தெடுத்து சீன செயலிகள் மீது பாகுபாட்டுடன் பாய்ந்துள்ளது. வெளிப்படைத்தன்மைக்கு எதிரான இந்த நடவடிக்கை உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிரானது.

பன்னாட்டு வர்த்தகம், இ-காமர்ஸுக்கு எதிரானதாகவும் உள்ளது. இது நுகர்வோர் நலன்களுக்கு நல்லதல்ல என்பதோடு சந்தைப் போட்டி நலன்களுக்கும் எதிரானது” என்று கூறியிருந்தது.

இந்நிலையில் இது இந்திய உள்நாட்டு வேலைவாய்ப்பையே பாதிக்கும் என்று சீனா மேலும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT