கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 60 சதவிகிதத்தை நெருங்குகிறது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொவிட்-19 நோயாளிகள் குணமடையும் விகிதம் 60 விழுக்காட்டை நெருங்கி வருகிறது.
இன்றைய நிலவரப்படி, கொவிட்-19 தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையைவிட 1,19,696 அதிகமாகும்.
இது வரை 3,34,821 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து, சீராக அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது குணமடைந்தோர் எண்ணிக்கை 59.07 சதவீதத்தை எட்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 13,099 கொவிட்-19 நோயாளிகள் குணமாகியுள்ளனர்.
தற்போது 2,15,125 நோயாளிகள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
தற்போது, கொவிட்டை கண்டறியும் பரிசோதனைச் சாலைகள் தொடர்ந்து அரசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது 1049, கொவிட்-19 பரிசோதனைச் சாலைகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இதில் அரசு பரிசோதனைச் சாலைகள் 761, தனியார் பரிசோதனைச் சாலைகள் 288.
· நிகழ்நேர பிசிஆர் (Real Time – RT PCR) அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 571 (அரசு : 362 + தனியார் : 209),
· ட்ரூனேட் (TrueNat) அடிப்படையிலானச் சோதனைச் சாலைகள் – 393 (அரசு : 367 + தனியார் : 26)
· CBNAAT அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 85 (அரசு : 32 + தனியார் : 53) ஆகும்.
பரிசோதனை செய்வதும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,10,292 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 86,08,654 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொவிட்-19 நோயாளிகளுக்கு, பாதுகாப்பாக ரத்தம் ஏற்றுவது தொடர்பான இரண்டாவது இடைக்கால வழிகாட்டு நெறிகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய இரத்தம் ஏற்றுதல் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.