எஸ்.எல்.நரசிம்மன் 
இந்தியா

லடாக் எல்லை நிலவரம் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை: தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினர் தகவல்

செய்திப்பிரிவு

தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினர் லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.எல்.நரசிம்மன் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனத் துருப்புகளின் கட்டுமானம் மற்றும் ஊடுருவல் தொடர்பாக ஊடகங்களில் வெளியானதகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை. அவற்றில் உண்மையில்லை. கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ம் தேதி நமது பகுதியில்தான் மோதல் தொடங்கியது. ஆனால் இருதரப்பிலும் ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் மோதலில் சீனப் பகுதியில் சண்டை முடிந்திருக்க வாய்ப்புள்ளது. ஜூன் 15-ம் தேதி மோதல் முடிந்தபோது இந்தியப் பகுதியில் சீனப் படையினர் இல்லை.

கர்னல் சந்தோஷ் பாபுவால் அகற்றப்பட்ட கட்டுமானம் சீனப்படையினரால் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன. இற்கு ஆம் என்றோ அல்லது இல்லை என்றோ என்னால் கூற முடியாது. செயற்கைக்கோள் படங்களில் ரோந்துமுனை 14-ஐ சுற்றிலும் வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு புள்ளிகள் தென்படுகின்றன. இது கடந்த 15-ம் தேதி மோதலின் விளைவாக கூட இருக்கலாம். கல்வான், தேப்சாங் மற்றும் பாங்காங் ஏரியில் சீனப் படையினர் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன. மேலும் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ முகாமோ அல்லது நிலையோ இல்லை என்கின்றனர். இவற்றை நான் மறுக்கிறேன்.

இந்திய வீரர்கள் ஏற்கெனவே ரோந்து வந்த 50 சதுர கி.மீ. பகுதியை சீனத் துருப்புகள் ஆக்கிரமித்திருப்பதாகவும் இந்திய வீரர்களுக்கு அங்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் சில ஊடகங்கள் கூறுகின்றன. இதில் உண்மை எதுவும் இல்லை.

இந்திய – சீன எல்லையின் சில இடங்களில் ஜூன் 15 முதல் 22 வரை சீனப் படை அளவு சற்று அதிகரித்திருக்கலாம். ஆனால் அதன்பிறகு சீனப் படை அளவு குறைந்துள்ளது. சீன வீரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்திய வீரர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. ஊடகங்களில் கூறுவது போல்எல்லையில் நிலைமை மோசமடையவில்லை. நிலைமை மேம்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT