இந்தியா

பாதுகாப்பு உடைகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

செய்திப்பிரிவு

தனி நபர் நோய் தொற்று பாதுகாப்பு உடைகள் (பிபிஇ) ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் ‘கோட்டா’ அடிப்படையில் ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி அளிப்பதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎப்டி) தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் இதற்கான தேவைகுறைந்ததும், விலை சரிந்ததும் இத்தொழிலில் ஈடுபட்ட நிறுவனங்களை பெரும் நெருக்கடிக்கு தள்ளின. உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து பிபிஇ பொருட்களை அதிகளவில் லூதியானாவில் உள்ள நிறுவனங்கள் தயாரித்தன. ஆனால் இவற்றை ஏற்றுமதி செய்ய அரசு அனுமதி தரவில்லை.

சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பிபிஇ உடைகள் இந்நிறுவனங்களில் தேங்கின. ஏற்றுமதிக்கு அனுமதி கோரி இந்நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. இந்தியாவில் நாளொன்றுக்கு 4.5 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான பிபிஇ உடைகள் தயாரிக்கப்படுகின்றன. உலகிலேயே இத்தகைய மருத்துவ பாதுகாப்பு உடைகள் தயாரிப்பில் இந்தியா 2-வது பெரியநாடாகத் திகழ்கிறது. இந்நிலையில், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் பிபிஇ தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபின் லூதியானாவில் 110 நிறுவனங்கள் பிபிஇ உடைகள் ஏற்றுமதி செய்ய அனுமதி பெற்றுள்ளன. சமீபத்தில் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், பிரதமர்மோடிக்கு எழுதிய கடிதத்தில், ‘‘பிபிஇ ஏற்றுமதிக்கு அனுமதிஅளிக்க வேண்டும்’’ என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT