சிஏ படிக்கும் மாணவர்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில் சிஏ தேர்வு எழுத வராதவர்கள் விலகியதாகக் கருதுங்கள், அதாவது அவர்கள் விலகல் என்ற தெரிவை மேற்கொள்ளாவிட்டாலும் தேர்வு எழுத முடியாதவர்களை விலகியவர்களாகவே கருதுங்கள் என்று இந்திய சார்ட்டர்ட் அக்கவுண்ட்ஸ் கழகத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உச்ச நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சஞ்சிவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த அறிவுறுத்தலை சார்ட்டர்ட் அக்கவுண்ட்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.
இது தொடர்பாக பெற்றோர் அமைப்பைச் சார்ந்த அனுபா ஸ்ரீவஸ்தவா மேற்கொண்ட மனுவில், தேர்விலிருந்து ’ஆப்ட் அவுட்’ அதாவது விலகல் என்ற தெரிவை நீக்குமாறு கோரியிருந்தனர். இதன் மீதான அறிவுறுத்தலாகவே உச்ச நீதிமன்றம் ஆப்ட் - அவுட் தெரிவு இல்லாமலேயே தேர்வு எழுத வராதவர்கள் விலகியதாகவே கருத வேண்டும் என்று கூறியுள்ளது.
மே, 2020 சிஏ தேர்வுகளுக்காக ஐசிஏஐ மாணவர்களுக்கு இந்த ஆப்ட்-அவுட் தெரிவை வழங்கியிருந்தது, இதன் மூலம் அடுத்த தேர்வுக்கு அவர்கள் பங்கேற்க முடியும்.
மேலும், ஐசிஏஐ உச்ச நீதிமன்றம் கூறியவற்றையும் உள்ளடக்கி, தேவைப்படும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 2ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவஸ்தவா, மனுதாரர் சார்பில் இன்னும் நிறைய தேர்வு மையங்கள் வேண்டும் என்றும் 3.46 லட்சம் சிஏ மாணவர்கள் தேர்வு எழுத வருவதால் மேற்கொள்ளவிருக்கும் கரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகள் ஆகியவற்றைக் கோரினார்.
சிஏ தேர்வுகள் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரை சிஏ தேர்வுகள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் ஐசிஏஐ-க்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பும்போது, “சூழ்நிலை மாறிக்கொண்டே இருக்கிறது. மாணவர் ஒருவர் ஆப்ட் -அவுட் என்ற விலகல் தெரிவை தேர்ந்தெடுக்கவில்லை, ஆனால் நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தேர்வு எழுத வருகிறார் என்றால் என்ன செய்வீர்கள்? எனவே தேர்வு எழுத வராத மாணவர்களையும் ஆப்ட்-அவுட், அதாவது விலகியவர்களாகவே பரிசீலிக்க வேண்டும்.
மிகவும் கறாராக இருக்காதீர்கள். கொஞ்சம் விட்டுக்கொடுங்கள். இந்த மாணவர்கள் மீது கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். நீங்கள் ஒரு தொழில்நேர்த்தியான அமைப்பு. நீங்கள்தன உங்கள் மாணவர்கள் நலன்களில் அக்கறை செலுத்த வேண்டும்” என்று ஐசிஏஐக்கு அறிவுறுத்தியது.