பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து 22 முறை உயர்த்தி, மக்களிடம் மிரட்டிப் பணம் பறிக்கிறது பாஜக தலைமையிலான மத்திய அரசு என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 7-ம் தேதியிலிருந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. கடந்த 3 வாரங்களில் 22 முறை பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.17 பைசாவும், டீசல் லிட்டருக்கு ரூ.11.14 பைசாவும் விலை அதிகரித்துள்ளது.
இந்த விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வைத் திரும்பப் பெறக் கோரியும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் இன்று ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. "பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக குரல் எழுப்புங்கள்" என்ற பிரச்சாரம் காங்கிரஸ் கட்சியால் நாடு முழுவதும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும், களத்திலும் எழுப்பப்பட்டது.
சமூக ஊடகங்கள் வாயிலாக நடந்த இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காணொலி மூலம் பேசி பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:
''மக்களை ஒருபுறம் கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் பெரும் துன்பத்தில் ஆழ்த்துகிறது மற்றொருபுறம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அவர்களின் வாழ்க்கையை மேலும் சிரமத்தில் தள்ளுகிறது.
கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய் காலத்தில் பெட்ரோல், டீசல் மீது ஏற்றப்பட்ட விலையை உயர்வை மத்தியில் ஆளும் மோடி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று நானும், காங்கிரஸ் தொண்டர்களும் ஒன்றாகச் சேர்ந்து வலியுறுத்துகிறோம்.
பெட்ரோல், டீசல் மீது மார்ச் மாதத்திலிருந்து விதிக்கப்பட்ட உற்பத்தி வரியை மத்திய அரசு திரும்பப் பெற்று, அந்தப் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும். இப்போதுள்ள பொருளாதாரச் சிக்கலில் அதைத் திரும்பப் பெற்றாலே மக்களைப் பெரும் சுமையிலிருந்து விடுவித்தது போல் இருக்கும்.
மக்கள் கடினமான உழைத்து ஈட்டிய வருமானத்தை பெட்ரோல், டீசல் விலை உயர்வின் மூலம் பறித்து தனது கஜானாவில் நிரப்புகிறது மத்திய அரசு. இதுபோன்ற கடினமான நேரத்தில் மக்களுக்கு ஆதரவாக அரசு இருக்க வேண்டும். இதைப் பயன்படுத்தி அவர்களின் பணம் பறித்து லாபம் ஈட்டக்கூடாது.
மக்களிடம் மிரட்டிப் பணம் பறித்தலுக்கு உதாரணமாக பெட்ரோல், டீசல் விலையை நியாயமற்ற வகையில் உயர்த்துகிறது மத்திய அரசு. இது நேர்மையற்றது மட்டுமல்ல, உணர்வற்றதும்கூட. இந்த விலை உயர்வால் நாட்டில் உள்ள விவசாயிகள், ஏழைகள், உழைக்கும் மக்கள், நடுத்தரக் குடும்பத்தினர், சிறு வியாபாரிகள் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள்.
தலைநகர் டெல்லியில் பெட்ரோல் லிட்டர் 80 ரூபாயைக் கடந்துவிட்டது. மார்ச் 25-ம் தேதிக்குப் பின், மோடி அரசு கடந்த 3 மாதங்களில் பெட்ரோல், டீசல் மீதான விலையை 22 முறை உயர்த்தியுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.12 பைசாவும், டீசல் லிட்டருக்கு ரூ.11 உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை உயர்த்தியதன் மூலம் லட்சக்கணக்கான கோடிகளை மத்திய அரசு வரி வருவாயாக வசூலித்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் மிகவும் வீழ்ச்சி அடைந்த நேரத்தில் இந்த லாபத்தை ஈட்டியுள்ளது
கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருகிறது. ஆனால், அந்தப் பலனை மக்களுக்கு வழங்காமல், 12 முறை உற்பத்தி வரியை மத்திய அரசு உயர்த்தி ரூ.18 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது''.
இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார்.