இந்தியா

சீன ராணுவம் பற்றி பிரதமர் மோடி கூறியது இமாலயத் தவறு: கெலாட் விமர்சனம்

செய்திப்பிரிவு

சீனா நமது எல்லையில் ஊடுருவவில்லை, நமது ராணுவ நிலைகளை கைப்பற்றவில்லை என பிரதமர் மோடிக் கூறியது இமாலய தவறு என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் விமர்சித்துள்ளார்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ம் தேதி இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல சீனா தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிட மறுக்கிறது.

கல்வான் எல்லைப்பகுதி எங்களுக்குச் சொந்தமானது. அதில் இறையாண்மை இருக்கிறது" என்று சீனா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ள இந்திய அரசு, சீனாவின் பேச்சை ஏற்க முடியாது. அது மிகைப்படுத்தப்பட்டது என்று மறுப்புத் தெரிவித்தது.

மேலும், சீனாவின் அத்துமீறல் நடவடிக்கை, இரு நாட்டு உறவில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வன்முறைச் சம்பவத்துக்கு சீன ராணுவம் நேரடியாகவே பொறுப்பேற்க வேண்டும் என இந்தியா சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த பிரதமர் மோடி, “இந்தியாவின் எந்தப் பகுதியையும், எந்த எல்லையையும் சீனா ஆக்கிரமிக்கவில்லை. இந்திய எல்லைப் பகுதியில் பாதுகாக்க ராணுவம் எந்த நேரத்திலும் தகுந்த பதிலடி கொடுக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. ராகுல் காந்தி “பிரதமர் இந்தியப் பகுதியை சீன ஆவேசத்துக்கு ஒப்படைத்துவிட்டார். அந்த நிலப்பகுதி சீனாவுடையது என்றால் 1. ஏன் நம் வீரர்கள் கொல்லப்பட வேண்டும்? 2. எங்கு அவர்கள் கொல்லப்பட்டார்கள்?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார் பிரதமர் பேச்சு குறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் கூறுகையில் ‘‘இந்தியப் பகுதிக்குள் எந்த ஒரு சீன ராணுவ வீரரும் நுழையவில்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்ய முடியுமா. என்ன நடந்தது என்பதை பிரதமர் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். சீனா நமது எல்லையில் ஊடுருவவில்லை, நமது ராணுவ நிலைகளை கைப்பற்றவில்லை என பிரதமர் கூறியது இமாலய தவறு’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT