கோப்புப்படம் 
இந்தியா

ஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டரில் 3 தீவீரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படையினர் அதிரடி

பிடிஐ

ஜம்மு காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் இன்று அதிகாலை தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு காஷ்மீரில் உள்ள ஆனந்த்நாக் மாவட்டம், குல் சோஹர் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர், ராஷ்ட்ரிய ரைஃபிள் பிரிவினர், போலீஸார் ஆகியோர் சேர்ந்து இன்று அதிகாலை குல் சோஹர் பகுதியை சுற்றி வளைத்து தேடுதலில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்புப் படையினரைக் கண்டதும் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் தரப்பில் எந்த உயிர்ச்சேதமும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தீவிரவாதிகள் யார், எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது. இவர்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி, இரு கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள், பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 26-ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் த்ரால் பகுதியில் உள்ள சேவா உல்லர் பகுதியில் 3 தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்ற நிலையில் அடுத்த 3 நாட்களில் இந்த என்கவுன்ட்டர் நடந்துள்ளது.

SCROLL FOR NEXT