பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாளை நாடுமுழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க முடிவு

பிடிஐ

நாட்டில் தொடர்ந்து 21-நாளாக அதிகரி்த்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராகவும், விலை உயர்வை திரும்பப்பெற உத்தரவிடக் கோரியும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் சார்பில் அந்தக் கட்சியின் தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்து நாளை மனு அளிக்க உள்ளனர்.

மேலும், நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட உள்ளன.

கடந்த 7-ம் தேதி முதல் தொடர்ந்து 21- நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இதுவரை கடந்த 21 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.12 உயர்ந்துள்ளது, டீசல் விலை லிட்டருக்கு ரூ.11.01 அதிகரித்துள்ளது.

கரோனா வைரஸ் லாக்டவுனால் ஏற்கெனவே மக்கள் வருமானமில்லாமல் தொழில் முறையாக நடக்காமல் மக்கள் பெரிய துன்பத்துக்கு ஆளாகி வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அவர்களை மேலும்வேதனைப்படுத்தும், ஆதலால் விலை உயர்வை திரும்பப்பெறக்கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த வாரம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன்பின்பும் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வந்தது.

இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் 30-ம் தேசி(செவ்வாய்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில் “ கரோனா வைரஸால் ஏற்கெனவே மக்கள் பெரிய துன்பத்தை அனுபவித்து வரும் போது, அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கும்விதத்தில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி வருகிறது

ஆதலால், ஜூன் 30-ம் தேதி முதல் ஜூலை 4-ம் தேதி வரை நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரம், தாலுகா, மண்டலம் அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும். தொடர்ந்து 21 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவருவது சமானிய மக்களின் சுமையை மேலும் அதிகப்படுத்தும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும், பெட்ரோல், டீசல் மீது உற்பத்தி வரியை உயர்த்தி அதிகமான லாபத்தை மத்திய அரசு ஈட்டியது. இந்த விலை உயர்வைக் கண்டித்து நாளை(திங்கள்கிழமை) காலை 11 மணி முதல் 12 மணிவரை நாட்டில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தர்ணா போராட்டம் நடத்தப்படும்.

கே.சி. வேணுகோபால்

இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் சமூக விலகலைக் கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப்பெற உத்தரவிடக்கோரி, காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் சார்பில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச்சந்தித்து கோரி்க்கை மனு அளிக்கப்படும்.

அதுமட்டுமல்லாமல் சமூக ஊடகங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் “பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்துபேசுங்கள்” என்று பிரச்சாரம் நடத்தப்படும். இதில் விவசாயிகள், டாக்ஸி, லாரி உரிமையாளர்கள், ஓலா, உபர் ஓட்டுநர்கள், தொழிலாளர்கள், சமானிய மக்கள் விலை உயர்வால் சந்திக்கும்பிரச்சினைகள் பேசப்படும்

இவ்வாறு வேணுகோபால் தெரிவித்தார்

SCROLL FOR NEXT