தூதரக அதிகாரி என்ற சட்டப்பாதுகாப்பு இருந்தும், வியன்னா உடன்படிக்கையை மீறி தன் வீட்டுக்குள் காவலர்கள் அத்துமீறி நுழைந்தது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சக மூத்த அதிகாரியிடம், குற்றம்சாட்டப்பட்ட அந்த தூதரக அதிகாரி புகார் தெரிவித்துள்ளார்.
1961-ம் ஆண்டு உருவாக் கப்பட்ட வியன்னா உடன்படிக்கையின்படி, தூதரக அதிகாரிகளுக்கு சட்டப்பாதுகாப்பு உள்ளது. மற்றொரு நாட்டைச் சேர்ந்த தூதர்கள், தூதரக அதிகாரிகள் வசிக்கும் வீடுகளும், தூதரக அலுவலகத்துக்கு உள்ள சட்டப்பாதுகாப்பு இருப்பதாக இந்த உடன்படிக்கையின் 30-வது பிரிவு தெரிவிக்கிறது.
ஹரியாணா மாநிலத்தின் குர்காவ்ன் போலீஸார் தன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த தன் மூலம் இந்த உடன்படிக்கை மீறப்பட்டுள்ளதாக, குற்றம்சாட்டப் பட்டுள்ள சவுதி அரேபிய தூதரக முதன்மைச் செயலாளர், மத்திய வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் தங்லுரா டார்லோங் கைச் சந்தித்து புகார் தெரிவித் துள்ளார்.
சவுதி தூதரக அதிகாரிகள், இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகத்திடம் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
அப்போது, “தங்களின் விருப் பத்துக்கு மாறாக இரு நேபாளப் பெண்கள் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் மோசமாக நடத்தப்படு வதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் போலீஸார் அங்கு நுழைந்துள்ளனர். அது தூதரக அதிகாரியின் வீடு என்பது போலீஸாருக்கு தெரியாது” என அவரிடம் இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார். தங்களது தூதரக அதிகாரி மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகார் தவறானது என சவுதி அரேபிய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
2 நேபாள பெண்களை அடைத்து வைத்து பாலியல் சித்ரவதை:
நேபாளத்தைச் சேர்ந்த இரு பெண்களை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக சவுதி தூதரக அதிகாரி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. டெல்லி குர்காவ்ன் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி கோர்கான் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் நிலைய தகவல்களின் படி, நேபாள நாட்டைச் சேர்ந்த 2 பெண்களை சிலர் ஏமாற்றி இங்கு அழைத்து வந்துள்ளனர். நல்ல சம்பளத்துடன் சவுதி அரேபியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர்களை அழைத்து வந்துள்ளனர். ஒருவருக்கு வயது 30, மற்றொருவருக்கு வயது 32. பின்னர் அவர்கள் இருவரையும் சவுதி தூதரகத்தின் முதன்மைச் செயலரிடம் விற்றுள்ளனர்.
3 மாதங்களுக்கு மேலாக அவர்கள் இருவரும் சவுதி தூதரக அதிகாரியின் வீட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த விஷயம் சவுதி தூதரக அதிகாரியின் மனைவிக்கும் தெரிந்திருக்கிறது. பின்னர் அங்கிருந்து சவுதி அரேபியாவின் ஜெத்தா நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த காலகட்டம் முழுவதும் அந்த இரு பெண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர்.
சவுதி தூதரக அதிகாரி மட்டுமல்லாமல், சவுதி நாட்டைச் சேர்ந்த வேறு சிலரும் இப்பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தியுள்ளனர். பல நேரங்களில் கத்தி முனையில் அச்சுறுத்தப்பட்டு உறவு கொள்ள வற்புறுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இருவரையும் குர்காவ்ன் வீட்டில் இருந்து போலீஸார் மீட்டுள்ளனர். நேபாள நாட்டின் தொண்டு நிறுவனம் ஒன்று அளித்த தகவலின்படி மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சவுதி தூதரக அதிகாரி மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குர்காவ்ன் காவல்துறை துணை ஆணையர் ராஜேஷ் சேச்சி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நடந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை அறிக்கை அளிக்குமாறு குர்காவ்ன் போலீஸாருக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேறொரு பெண், அந்த தூதரக அதிகாரிக்கு விற்கப்பட்டுள்ளார். அவர் எப்படியோ தப்பி வந்து தொண்டு நிறுவனத்திடம் புகார் தெரிவித்தபிறகே, இந்த இரு பெண்கள் அங்கு பாலியல் அடிமைகளாக சித்ரவதை செய்யப்படுவது அம்பலமானது.