என்சிபி கட்சியின் தலைவர் சரத் பவார்: படம் | ஏஎன்ஐ. 
இந்தியா

கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை பாதுகாப்பு அமைச்சகத்தின் தோல்வி எனக் கூற முடியாது: சரத் பவார் பேச்சு

பிடிஐ

கிழக்கு லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதல் விவகாரத்தை பாதுகாப்பு அமைச்சகத்தின் தோல்வி எனச் சொல்லிவிட முடியாது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், கடந்த 1962-ம் ஆண்டு சீனாவுடான போருக்குப்பின் நம்முடைய நிலப்பரப்பில் 45 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பை சீனா ஆக்கிரமித்ததையும் மறக்க முடியாது என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 15-ம் தேதி இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாகவும், அதைத் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

எல்லை விவகாரத்தில் பிரதமர் மோடி சீனாவிடம் சரணடைந்துவிட்டார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடி வருகிறார். இந்தச் சூழலில் மகாராஷ்டிராவில் காங்கிரஸுடன் கூட்டணி ஆட்சி நடத்தும் மகா விகாஸ் அகாதி அரசில் இடம் பெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சி மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் சதாரா நகரில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கிழக்கு லடாக் எல்லை தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதில் அளித்துப் பேசியதாவது:

“லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தில் சமீபத்தில் நடந்த அனைத்தையும் பார்த்துவிட்டு, இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் தோல்வி என்று முத்திரை குத்திவிடக் கூடாது. இந்திய வீரர்கள் எப்போதும் விழிப்புடனே இருப்பார்கள்.

கல்வான் பள்ளத்தாக்கில் நடந்து முடிந்த சம்பவங்கள் அனைத்துமே உணர்வுபூர்வமானவை. கல்வான் எல்லையில் சீனா நமது ஆத்திரத்தைத் தூண்டும் வகையில் கோபத்தை உண்டாக்கும் வகையில் நடந்துள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ராணுவம் பாதை அமைத்து வருகிறது. அதில் சீன ராணுவத்துக்கு என்ன பிரச்சினை. அவர்கள் நம்முடைய பகுதிகளை ஆக்கிரமித்து சாலை அமைக்க முயன்றார்கள். இதனால் இருதரப்புக்கும் மோதல் நடந்தது. இது யாருடைய தோல்வியும் இல்லை. நமது எல்லைக்குள் யாரேனும் கண்காணிப்பு நேரத்தில் வந்தால், அதை நாம் பாதுகாப்பு அமைச்சகத்தின் தோல்வி என்று சொல்லிவிட முடியாது.

கண்காணிப்பு நடவடிக்கை கல்வான் பள்ளதாக்கில் இருந்தது. அதை மீறிய போதுதான் சீனாவுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் நடந்தது. இதன் மூலம் நம்முடைய வீரர்கள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். இந்திய ராணுவம் அங்கு இல்லாத நேரத்தில் சீன ராணுவம் வந்து சென்றிருந்தால் நம்மால் உணர்ந்திருக்க முடியுமா? ஆதலால் பாதுகாப்பு அமைச்சகத்தின் தோல்வி எனும் என்ற குற்றச்சாட்டு சரியல்ல.

1962-ம் ஆண்டு போரை யாரும் மறந்துவிட முடியாது. அந்தப் போர் முடிந்தபின் நம்முடைய நிலப்பகுதியில் 45 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பை சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. இதை யாராலும் மறக்க முடியாது. இப்போதும் அந்த நிலம் சீனாவின் வசம்தான் இருக்கிறது. மீண்டும் அந்தப் பகுதியிலிருந்து கூடுதலான நிலத்தை சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ளதா என எனக்குத் தெரியாது.

நான் ஒரு குற்றச்சாட்டை எழுப்பும்போது, நான் அதிகாரத்தில் இருந்தால் உண்மையில் அங்கு என்ன நடந்ததுள்ளதை என்பதை ஆராய்வேன். மிகப் பெரிய இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் அதைப் புறக்கணிக்க முடியாது. இது தேசப் பாதுகாப்பு தொடர்பான விஷயம். இதை அரசியலாக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன்''.

இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT