ராஜஸ்தானைத் தொடர்ந்து ஹரியாணா மாநிலத்தின் பல பகுதிகளிலும் இன்று வெட்டுக்கிளிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளன. இதையடுத்து அங்கு பூச்சி மருந்தை தெளிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வெட்டுகிளிகள் பெரிய அளவில் கூட்டமாக படையெடுத்து வந்து பயிர்களை உண்பது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஈரான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து உருவாகும் இந்த வெட்டுக்கிளிகள் ஒரே நாளில் 150 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் ஆற்றல் கொண்டவை.
இந்த மாத தொடக்கத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில் பரவியிருந்த பாலைவன வெட்டுக் கிளிகள் உத்தரபிரதேசம், ராஜஸ் தான், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப் போன்ற இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் படையெடுத்தன. இவை உணவுப் பயிர்களையும் தாவர இனங்களையும் நாசம் செய்து வருகின்றன.
ராஜஸ்தானில் பார்மர், ஜோத்பூர், பிகானீர், கங்காநகர், ஹனுமன்கர் ஆகிய மாவட்டங்களில் தற்போது வெட்டுக்கிளிகள் கூட்டம் பெருந்திரளாக காணப்படுகிறன. இது விவசாயிகளுக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது. உணவுப் பயிர்களை வெட்டுக்கிளி கள் நாசம் செய்து வருவதால், உற்பத்தி கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் ராஜஸ்தானைத் தொடர்ந்து ஹரியாணா மாநிலத்தின் பல பகுதிகளிலும் இன்று வெட்டுக்கிளிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளன. குருகிராம் உட்பட மாநிலத்தின் பல பகுதிகளிலும் இன்று காலை வெட்டுக்கிளிகள் காணப்படுகின்றன.
இதையடுத்து, அங்கு பூச்சி மருந்தை தெளிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பூச்சிக்கொல்லி தெளிப்பதற்காக தீயணைப்பு படைகள், கண்காணிப்பு சாதனங்கள், ஸ்பிரே சாதனத்துடன் கூடிய கட்டுப் பாட்டு வாகனங்கள் மற்றும் டிராக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.