பிரதமர் நிவாரண நிதியிலிருந்து முன்பு ரூ.20 லட்சத்தை ராஜீவ்காந்தி அறக்கட்டளை பெற்றிருந்ததைத் திருப்பிக் கொடுத்துவிட்டால், இந்திய எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு அகன்றுவிடும் என்று பிரதமர் மோடி மக்களுக்கு உறுதியளிக்கத் தயாரா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ட்விட்டரில் நேற்று பதிவிட்ட கருத்தில், ''பார்ட்னர் ஆர்கனைசேஷன் அண்ட் டோனர்ஸ் இயர் 2005-06, மற்றும் 2007-08 ஆகியவற்றின் விவரங்களைப் பார்த்தபோது பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இதிலிருந்து குடும்ப அறக்கட்டளையான ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இந்திய மக்கள் தாங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை பிரதமர் நிவாரணத்துக்கு அளிக்கின்றனர். சக மனிதனுக்கு உதவ அனுப்புகின்றனர். இந்தப் பொதுமக்கள் பணத்தை ஒரு குடும்பம் நடத்தும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளிப்பது பெரிய மோசடி மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கு இழைத்த துரோகமாகும்.
ஒரு குடும்பத்தின் பணத்தின் மீதான ஆசை தேசத்தையே பாதித்துள்ளது. இப்படி சுயலாபத்துக்காக தேச மக்களின் பணத்தைக் கொள்ளை அடித்ததற்கு காங்கிரஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும். காங்கிரஸின் ஏகாதிபத்திய பரம்பரை சுயலாபக் கொள்ளைக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் நீண்ட ட்வீட்களால் பதில் அளித்துள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள கருத்துகள்:
''2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு? முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் பாஜக முடிச்சுப் போடுகிறது! சீன ஆக்கிரமிப்பை எப்படி, எப்பொழுது மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன் இதுவரை பதில் இல்லை?
2005 ஆம் ஆண்டில் ராஜீவ்காந்தி அறக் கட்டளை அந்தமான் தீவுகளில் சுனாமி நிவாரணப் பணிகளுக்காகப் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.20 லட்சம் பெற்றது உண்மைதான். ஒவ்வொரு ரூபாயும் நிவாரணப் பணிகளுக்குச் செலவழிக்கப்பட்டு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதில் என்ன தவறு?
ஜே.பி.நட்டா நிகழ்காலத்துக்கு வர வேண்டும். கடந்தகாலத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்காதீர்கள் உங்களின் அரை உண்மைகளால் சிதைக்கப்பட்டுவிட்டது. இந்திய எல்லைக்குள் சீன ஊடுருவல் குறித்த எங்கள் கேள்விக்குப் பதில் அளியுங்கள்.
ஒருவேளை ராஜீவ்காந்தி அறக்கட்டளை பிரதமர் நிவாரண நிதியிடம் இருந்து பெற்ற ரூ.20 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்துவி்ட்டால், இந்திய எல்லையில் சீன ஆக்கிரமிப்பு அகற்றப்படும், ஏற்கெனவே இருக்கும் நிலை உறுதி செய்யப்படும் என்று பிரதமர் மோடி மக்களுக்கு உறுதியளிப்பாரா?
அரை உண்மைகள் பேசுவதில் நட்டா சிறப்புவாய்ந்தவர். அவரின் அரை உண்மைகளை எங்கள் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா வெளிப்படுத்திவிட்டார்".
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும், ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய சீன எல்லையின் செயற்கைக்கோள் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். ஒரு புகைப்படம் மே 22-ம் தேதி எடுத்தது, மற்றொரு புகைப்படம் ஜூன் 22-ம் தேதி எடுத்தது என்று பதிவிட்டு ஜூன் 22-ம் தேதி புகைப்படத்தில் இருக்கும் வேறுபாடுகளையும் ஆக்கிரமிப்பு இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.