கோப்புப்படம் 
இந்தியா

3-வது வாரமாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: 21 நாட்களில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.11 உயர்வு

பிடிஐ

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் தொடர்ந்து 3-வது வாரமாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்றும் உயர்த்தியுள்ளன.

பெட்ரோல் விலை லிட்டருக்கு இன்று 25 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 21 பைசாவும் உயர்ந்துள்ளது.
இதுவரை கடந்த 21 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.12 உயர்ந்துள்ளது, டீசல் விலை லிட்டருக்கு ரூ.11.01 அதிகரித்துள்ளது.

லாக்டவுன் காலத்தில் சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை படு வீழ்ச்சியடைந்து பேரல் 20 டாலருக்கும் கீழாகச் சென்றபோது, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்தக் குறைப்பையும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை.

அந்த விலைக் குறைப்பின் பலன்களை நுகர்வோருக்கு அளிக்காமல் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தவுடன் அந்த விலை உயர்வின் சுமையை மக்கள் மீது தொடர்ந்து 21-வது நாளாக எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றி வருகின்றன.

இன்றைய விலை உயர்வால் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.80.13-ல் இருந்து ரூ.80.38 ஆகவும், டீசல் விலை லிட்டர் ரூ.80.19-ல் இருந்து ரூ.80.40 ஆகவும் அதிகரித்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.83.59க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.77.61க்கும் விற்கப்படுகிறது

மும்பையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 86.91 ரூபாயில் இருந்து 87.14 ரூபாயாகவும், டீசல் விலை ஒரு லிட்டர் 78.51 ரூபாயில் இருந்து 78.71 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் அதிகபட்சமான வரியாகும். விலை உயர்வில் மூன்றில் இருபங்கு வரி இடம் பிடித்துள்ளது. மத்திய அரசின் உற்பத்தி, விற்பனை வரி அல்லது வாட் வரி போன்றவைதான் விலை உயர்வில் 60 சதவீதம் இடம் பெற்றுள்ளன.

பெட்ரோல் விலையில் 63 சதவீதம் அதாவது 50.69 ரூபாயை வரியாகச் செலுத்துகிறோம். இதில் 32.98 ரூபாயை மத்திய அரசுக்கு உற்பத்தி வரியாகவும், 17.71 ரூபாயை மாநில அரசுகளுக்கு வாட் வரியாகவும் செலுத்துகிறோம்

டீசலில் ஒரு லிட்டர் விலையில் ரூ.49.43 அல்லது 63 சதவீதம் வரியாக மக்கள் மீது சுமத்தப்படுகிறது. இதில் உற்பத்தி வரியாக 32.98 ரூபாயும், வாட் வரியாக 17.71 ரூபாயும் இடம் பிடிக்கிறது.

பெட்ரோல், டீசல் மீதான வரியைக் கழித்துவிட்டு மக்களுக்கு விற்பனை செய்தால் அதன் அடக்கவிலை லிட்டர் 25 ரூபாய்க்குள்ளாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT