லடாக்கின் கிழக்கு பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த வாரம் சீனப் படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் நமது வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
ராணுவத் தளபதி எம்.எம்.நரவானே மோதல் நடந்த லடாக் பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார். அங்குள்ள ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நிலவரங்களை கேட்டறிந்தார். சீன வீரர்களுடன் சண்டையில் ஈடுபட்ட வீரர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார். 2 நாள் பயணத்துக்குப் பிறகு நேற்று முன்தினம் டெல்லி திரும்பினார். இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ராணுவத் தளபதி நரவானே டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார்.
அப்போது, லடாக் பகுதியில் நிலவும் சூழல், பாதுகாப்பு ஏற்பாடுகள், நமது படையினர் பற்றிய விவரங்கள், தான் நேரில் சென்று ஆய்வு செய்து ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய விவரங்கள் ஆகியவை குறித்து ராஜ்நாத் சிங்கிடம் ராணுவத் தளபதிநரவானே விவரித்தார். அவற்றைராஜ்நாத் சிங் கவனமாக கேட்டறிந்தார். லடாக்கில் மேலும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசித்ததாகத் தெரிகிறது. இந்த சந்திப்பு பற்றி ராஜ்நாத் சிங் பிரதமர் மோடியை சந்தித்து விளக்குவார் எனத் தெரிகிறது.