டெல்லி மெட்ரோ ரயில் நீட்டிக்கப்பட்ட சேவையை தொடங்கி வைப்பதற்கு அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
டெல்லியின் பதர்பூரில் இருந்து ஹரியாணா மாநிலத்தின் பரீதாபாத் வரை நீட்டிக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பின்னர், பிரதமர் மோடி திடீர் ரயில் பயணத்தையும் மேற்கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இந்த நிலையில், டெல்லியின் முதல்வரான அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்காமல் நெறிகளை டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் மீறியுள்ளதாக அம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க மறுத்த டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன், இந்த நிகழ்ச்சி முற்றிலும் ஹரியாணா அரசால் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவுக்கு பிரிவு வாரியாக அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதன்படி, பிரதமர் அல்லது முதல்வர் என யாரேனும் ஒருவரை நிகழ்ச்சிக்கு அழைக்கலாம் என்றபடியே கேஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பாஜக வட்டாரம் தெரிவித்துள்ளது.