சர்வதேச பயணிகள் விமானப்போக்குவரத்து ஜூலை 15 வரை நிறுத்தி வைக்கப்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பான டிஜிசிஏ அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தத் தொடங்கியவுடன் மே 25 முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் டிஜிசிஏ நேற்று வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் இருந்து புறப்படுவதற்கு மற்றும் இந்தியா வருவதற்கான சர்வதேசபயணிகள் விமானப் போக்குவரத்து ஜூலை 15-ம் தேதி இரவு 11.59 மணி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. எனினும் தேவையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடத்தில் சிறப்பு விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.
ஜூலை 15 வரையிலானகட்டுப்பாடு, சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும். சர்வதேச சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது” என்று கூறப்பட்டுள்ளது.