கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடனான மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தனர். பிஹாரில் தேர்தல் வருவதையொட்டி பிரதமர் மோடி இந்த விவகாரத்தை தன் தேர்தல் லாபத்துக்காகப் பயன்படுத்தி பிஹாரைச் சேர்ந்த ராணுவப்பிரிவை மட்டும் தேர்ந்தெடுத்துப் பாராட்டியிருப்பதாக சிவசேனா கடுமையாகத் தாக்கியுள்ளது.
மகாராஷ்ட்ராவில் ஆளும் கட்சியான சிவசேனா இது தொடர்பாக, பிரதமர் மோடி ‘சாதி, பிராந்திய அரசியல் எனும் குறுகிய நோக்கங்களுக்காக இந்திய ராணுவ வீரர்களின் தைரியத்தைப் பயன்படுத்துகிறார் என்று தங்கள் பத்திரிகையான சாம்னாவில் தாக்கி எழுதியுள்ளனர்.
“கல்வான் பள்ளத்தாக்கு சண்டையில் பிஹார் படைப்பிரிவின் தைரியத்தை மோடி பாராட்டுகிறார், நாடு அதன் எல்லைகளில் நெருக்கடிகளை சந்தித்து வரும்போது மஹர், மராத்தா, ராஜ்புத், சீக்கியர்கள், கூர்க்கா, டோக்ரா படைப்பிரிவுகள் என்ன சும்மா உட்கார்ந்து கொண்டு புகையிலை மென்று கொண்டிருந்தார்களா?
நேற்று மகாராஷ்ட்ரா வீரர் சுனில் காலே என்பவர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்தார். பிஹாரில் தேர்தல் வருவதால் இந்திய ராணுவத்தையே சாதி, பிராந்திய மட்டத்தில் பிரித்துப் பார்க்கிறார் பிரதமர்.
இத்தகைய மோசமான தேர்தல் அரசியலை ஏற்க முடியாது. இந்த அரசியல் ஒரு நோய், கரோனா வைரஸை விடவும் படுமோசமானது”, என்று சிவசேனா தாக்கியுள்ளது.