தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கரோனா வைரஸ் எதிர்ப்பு ஊசி மருந்தான ரெம்டெசிவிர் அனுப்பப்பட்டுள்ளது.
‘ஹெபடைடிஸ் சி’ வைரஸை அழிக்க அமெரிக்காவை சேர்ந்த கிளியட் சயின்சஸ் நிறுவனம், கடந்த 2009-ம் ஆண்டில் ரெம்டெசிவிர் மருந்தை கண்டுபிடித்தது. இந்த மருந்து, ‘ஹெபடைடிஸ் சி’ வைரஸை குணப்படுத்துவதில் எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் எபோலோ வைரஸ் காய்ச்சலை குணப்படுத்த பெரிதும் உதவியது.
தற்போது கரோனா வைரஸ் நோயாளிகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து நல்ல பலன் அளிப்பது தெரியவந்துள்ளது. இந்த மருந்தை, கரோனா வைரஸ் அவசர சிகிச்சைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
இதேபோல இந்தியாவில் அவசர சிகிச்சை தேவைப்படும் கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தை வழங்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அண்மையில் அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து கிளியட் சயின்சஸ் நிறுவனத்திடம் உரிய அனுமதி பெற்று 5 இந்திய நிறுவனங்கள் , ரெம்டெசிவிர் மருந்தை உற்பத்தி செய்யத் தொடங்கி உள்ளன. இதில் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஹெட்ரோ நிறுவனம், முதல்கட்டமாக 20 ஆயிரம் ரெம்டெசிவிர் ஊசி மருந்தை தயாரித்து தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், உத்தர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது.
இதுகுறித்து ஹெட்ரோ நிறுவன தலைவர் வம்சி கிருஷ்ண பண்டி கூறும்போது, ‘‘100 மில்லி கிராம் கொண்ட ரெம்டெசிவிர் ஊசி மருந்தின் விலை ரூ.5,400 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 4 வாரங்களில் ஒரு லட்சம் ஊசி மருந்துகள் உற்பத்தி செய்யப்படும். அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே இந்த ஊசி மருந்து விற்பனை செய்யப்படும்’’ என்று தெரிவித்தார்.
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிப்லா நிறுவனமும் ரெம்டெசிவிர் ஊசி மருந்தை தயாரித்து வருகிறது. இந்த நிறுவன மருந்தின் விலை ரூ.5,000-க்குள் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.