இந்தியா

ஆகஸ்ட் மாதத்தில் கரோனா தொற்று கேரளாவில் கடுமையாகும்: பினராயி விஜயன் எச்சரிக்கை

கா.சு.வேலாயுதன்

ஆகஸ்ட் மாதத்தில் கரோனா தொற்று கேரளாவில் கடுமையாகும் என்று முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

‘‘இன்று கேரளத்தில் 123 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கடந்த 7 நாட்களாகத் தொடர்ந்து நோயாளிகளின் எண்ணிக்கை 100-ஐத் தாண்டுகிறது. இன்று 53 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இன்று நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 84 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 33 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர்.

கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 6 பேருக்கு நோய் பரவியுள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 24 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 18 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், தலா 13 பேர் பத்தனம்திட்டா மற்றும் கொல்லம் ஆகிய மாவட்டங்களையும், தலா 10 பேர் எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களையும், 9 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 7 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 6 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 4 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 3 பேர் இடுக்கி மாவட்டத்தையும், தலா 2 பேர் திருவனந்தபுரம், கோட்டயம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று நோய் குணமடைந்தவர்களில் 12 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 9 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 8 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 6 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 5 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், தலா 3 பேர் திருச்சூர் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களையும், தலா 2 பேர் கோட்டயம் இடுக்கி மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களையும், ஒருவர் கண்ணூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று ஒரு நாளில் 5,240 பேருக்குப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளன. இதுவரை கேரளாவில் 3,726 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 1,761 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 1,59,616 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 2,349 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். இன்று கரோனா அறிகுறிகளுடன் 344 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,56,491 பேருக்குப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 4,182 பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன. கேரளாவில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜூலை மாதம் முதல் தினமும் 15,000 பரிசோதனைகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 41,944 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 40,302 பேருக்கு நோய் இல்லை எனத் தெரியவந்துள்ளது. கேரளாவில் தற்போது 113 நோய்த் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் மிகவும் தீவிரமாக இருக்க வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால்தான் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலம் இதுவரை 7 சதவீதம் பேருக்கு மட்டுமே நோய் பரவியுள்ளது. மீதமுள்ள 93 சதவீதம் பேருக்கு நோய் பரவாமல் தடுத்தது நமது சாதனையாகும். வீடுகளில் தனிமைப்படுத்தல் திட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்துவதன் மூலம்தான் இந்தச் சாதனையை நம்மால் படைக்க முடிந்தது. இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்திலேயே ஆன்டிபாடி பரிசோதனை நடத்தப்படும். அதன் பிறகே அவர்கள் தங்களது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் நேராகத் தங்களது வீடுகளுக்குச் செல்ல வேண்டும். வழியில் உறவினர் வீடுகளுக்கோ, அல்லது வேறு எங்குமோ செல்லக்கூடாது. இதை போலீஸார் கண்காணிப்பார்கள்.

கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருப்பதன் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன்படி நாம் எங்கு வெளியே சென்றாலும் செல்லும் இடம், யார், யாரைச் சந்திக்கிறோம் உள்ளிட்ட விவரங்களைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஆகஸ்ட் மாத இறுதிக்குள் கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும் எனத் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. எனவே நாம் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் மிகவும் தீவிரமாக இருக்க வேண்டும். சிறிது கவனக்குறைவாக இருந்தாலும் கூட நாம் பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 29 சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளின் உதவியும் நாடப்படும். இந்த 29 சிறப்பு மருத்துவமனைகளில் 8,537 படுக்கைகளும், 872 அவசர சிகிச்சைப் படுக்கைகளும், 482 செயற்கை சுவாசக் கருவிகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கை கூடினால் படுக்கைகள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். கேரளாவில் 10 லட்சம் பேருக்கு 109 பேருக்கு மட்டுமே நோய் பரவியுள்ளது. தேசிய அளவில் இந்த எண்ணிக்கை 362 ஆகும்.

கேரளாவில் மரண சதவீதம் 0.6 மட்டுமே. தேசிய அளவில் இது 3.1 சதவீதம் ஆகும். பரிசோதனை முடிவுகளில் பாசிட்டிவ் சதவீதம் கேரளாவில் 1.8 ஆகும். தேசிய அளவில் இது 6.2 சதவீதம் ஆகும். கேரளாவில் இதுவரை கரோனா நோய்க்கு 22 பேர் மரணமடைந்துள்ளனர். இவர்களில் 20 பேருக்கு வேறு பல தீவிர நோய்கள் இருந்தன. கேரளாவில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசத்தையும் கண்டிப்பாக அணிய வேண்டும். நிபந்தனைகளைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு எதிராக போலீஸார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் முகக் கவசம் மற்றும் ஹெல்மெட் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை ரத்து செய்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது. ஆனால், கேரளாவில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டோம். இந்தத் தேர்வுகளை நடத்தக்கூடாது என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் வந்தன. நம் அரசுக்குச் சாபமும் கொடுத்தார்கள். ஆனால் இந்த இரு தேர்வுகளையும் நல்ல முறையில் எந்த பிரச்சினையும் ஏற்படாத வகையில் நடத்தி முடித்துள்ளோம். இது ஒரு சாதனையாகும்.

இந்தியாவிலேயே கேரளாவில் மட்டும்தான் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். தேசிய அளவில் கேரளாவின் இந்த நடவடிக்கை அனைவராலும் பாராட்டப்பட்டது. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை ஜூன் 30-ம் தேதியும், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை ஜூலை 10-ம் தேதிக்கு முன்பும் வெளியிடத் தீர்மானித்துள்ளோம்’’.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

SCROLL FOR NEXT