லாக்டவுன் காலக்கட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களில் பெரும்பாலும் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலையின்றி நாடு முழுதும் பல இடங்களுக்கு நடந்தே சென்றதும், சிலர் உயிரிழந்ததும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் 2 கோடி கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.4,597 கோடி பண உதவி அளித்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிரதமர் ஷ்ரம் யோகி மான்தன் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓராண்டில் கட்டமைக்கப்படாத பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள் 39 லட்சம் பேர் பதிவு செய்யப்பட்டனர்.
பொதுமுடக்கக் காலத்தின் போது வருமானம் கிடைப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் கட்டமைப்பில் இல்லாத தொழில்களில் இருக்கும் தொழிலாளர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பலர் தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்யப்படாதவர்கள். அதனால் அவர்களால் அரசுத் திட்டங்கள் பலவற்றை, பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.
எனவே அவர்கள் தங்கள் மாநிலங்களுக்கு பாதுகாப்பாக, சென்று சேர வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது. செஸ்(cess) நிதியை மாநில அரசுகள் கட்டுமானத் தொழிலாளர்களின் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் ஆணை வெளியிட்டிருந்தது. இதுவரை நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டிருந்த 2 கோடி கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 4957 கோடி ரூபாய் செஸ் நிதி மூலமாக வழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் தங்கள் வயதான காலத்தில் பாதுகாப்பு பெறுவதை உறுதி செய்யும் வகையில் பிரதமர் ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா என்ற ஓய்வூதியத் திட்டம், கட்டமைக்கப்படாத தொழிலாளர்களுக்காக மத்திய அரசால் தொடங்கப்பட்டது. வீட்டு வேலை செய்பவர்கள், தெரு வியாபாரிகள் சத்துணவு கூடப் பணியாளர்கள், தலையில் சுமைகளைச் சுமந்து செல்பவர்கள், செங்கல் சூளைப் பணியாளர்கள், செருப்பு தைப்பவர்கள், சலவைத் தொழிலாளர்கள், விவசாயப் பணியாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள் கைத்தறித் தொழில் பணியாளர்கள், மாத வருமானம் 15 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள அனைவரும் இத் திட்டத்தில் இணையலாம். திட்டத்தில் இணைவதற்கான வயதுவரம்பு 18.
முதல் 40 வயது ஆகும் பயனாளிகள் இந்த ஓய்வூதியத் திட்டத்தின்படி ஒவ்வொரு மாதமும் 50 சதவீதத் தொகையை அளிப்பார்கள். மத்திய அரசு அதற்கு இணையான தொகையை அளிக்கும். 60 வயதான பிறகு, ஓய்வூதியம் வழங்கப்படும். சந்தாதாரர்களுக்கு வங்கியில் சேமிப்புக் கணக்கு, ஆதார் அட்டை, அலைபேசி ஆகியவை இருக்க வேண்டும். கட்டமைக்கப்படாத பிரிவில் பணியாற்றும் பணியாளர்கள் எந்த ஒரு பொது சேவை மையத்தையும் அணுகி, தங்களுடைய வங்கிக்கணக்குப் புத்தகம், ஆதார் அட்டை ஆகியவற்றைக் காண்பித்து, திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
இத்திட்டம் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள இந்திய ஆயுள் காப்பீட்டு அலுவலகங்கள் (LIC), தொழிலாளர் ஈட்டுறுதித் திட்ட அலுவலகங்களையும்(EPFO) அவர்கள் அணுகலாம். 60 வயதை அடைந்தவுடன் ஓய்வூதியதாரர்களுக்கு, மாதமொன்றுக்கு 3000 ரூபாய் உறுதியாகக் கிடைக்கும் ஒரு பணியாளர் 18 வயதில் இத்திட்டத்தில் சேர்ந்தால், ஒவ்வொரு மாதமும் அவர் 55 ரூபாய் செலுத்த வேண்டும். 25 வயதில் ஒருவர் இத்திட்டத்தில் சேர்ந்தால் அவர் மாதம் ஒன்றுக்கு 80 ரூபாய் செலுத்த வேண்டும். ஒருவர் 40 வயதில் இத்திட்டத்தில் இணைந்தால் மாதம் ஒன்றுக்கு 200 ரூபாய் செலுத்த வேண்டும். மத்திய அரசு இதற்கு இணையான தொகையை ஒவ்வொரு மாதமும் வழங்கும். சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை கட்டமைக்கப்படாத பிரிவைச் சேர்ந்த 39 லட்சம் பணியாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் பிரதமர் ஷ்ரம் யோகி மான்தன் ஓய்வூதிய அட்டைகள் 55 665 வழங்கப்பட்டுள்ளன.
கோவிட்-19 பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட கட்டமைக்கப்படாத தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் உணவுப்பொருள்களும், பண உதவியும் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டன. கரூர் மாவட்டத்தில் 55 611 தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் வீதம் மொத்தம் 11.12 கோடி ரூபாய் கோவிட்-19 நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. 33 411 கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் எண்ணெய் சிறப்பு கோவிட் நிவாரண உதவியாக வழங்கப்பட்டது.
கரூரில் பல்வேறு துறைகளில். கட்டமைக்கப்படாத கட்டுமானப் பிரிவுப் பணியாளர்கள், தெரு வியாபாரிகள் உட்பட, 68134 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். கரூரை அடிப்படையாகக் கொண்ட கட்டமைக்கப்பட்ட பணியாளர் நலச் சங்கம் ஒன்றின் மாநிலப் பொதுச்செயலாளர் திரு சுவாமிநாதன், கட்டுமானப் பணியாளர்களுக்கு 2000 ரூபாய் பணமும், இலவச ரேஷன் பொருள்களும் வழங்கியதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்தார். பொதுமுடக்கம் காரணமாக தொழிலாளர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால், குறைந்தபட்சம் 5,000 ரூபாயாவது, அரசு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
வானளாவிய உயரமான கட்டடங்கள், குடியிருப்புகள், பாலங்கள், ஆகியவற்றை வியப்புடன் பார்க்கும் போது நாம், அத்தகைய கட்டடங்கள் உருவாவதற்குப் பின்னணியில் இருந்த கட்டுமானத் தொழிலாளர்களை மறந்துவிடக் கூடாது இதுவரை பதிவு செய்யப்படாமல் உள்ள தொழிலாளர்களுக்கு அரசு திட்டங்களின் பயன்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காக அவர்களைப் பதிவு செய்வதற்காக அரசு அனைத்து முயற்சிகளையும் விரைந்து மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.