சாலையோரக் கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு உதவுவதற்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தும் 'பிரதம மந்திரி சாலையோர வியாபாரிகள் ஆத்ம நிர்பார் நிதி' திட்டத்தைக் கண்காணிக்க 34 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த 34 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும், மாநிலங்களில் இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைக் கண்காணித்து, தேவையான உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்குவர்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் தொழில், வியாபாரத்தை இழந்து சாலையோரம் கடை வைத்து பிழைப்பு நடத்தும் வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு, 'பிரதம மந்திரி சாலையோரக் கடை ஆத்ம நிர்பார் நிதி' திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, சாலையோரத்தில் கடை வைத்திருப்பவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் எளிதாகத் திருப்பிச் செலுத்தும் வகையில் கடன் வழங்கும் திட்டமாகும். இதில் சாலையோர வியாபாரிகளுக்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை முதலீடாக வழங்கப்படும். இந்தக் கடன் தொகையை ஓர் ஆண்டுக்குள் மாதத் தவணையில் வங்கியில் செலுத்திட வேண்டும்.
சரியான நேரத்தில் செலுத்தும் வியாபாரிகளுக்கு 7 சதவீதம் வட்டி நேரடி பணப்பரிமாற்றத் திட்டத்தின் கீழ் மீண்டும் அவர்களின் வங்கிக் கணக்கிற்கே திருப்பி அளிக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் காய்கறி, பழங்கள் விற்பவர்கள், சாலை ஓரத்தில் சிற்றுண்டிக் கடை நடத்துபவர்கள், தேநீர், பகோடா கடை வைத்திருப்பவர்கள், சிறிய துணிக்கடை, செருப்புக் கடை, கலைப்பொருட்கள் கடை, புத்தகக் கடை, சலூன் கடை, செருப்பு தைப்பவர்கள், துணி சலவை செய்வோர் எனப் பலரும் இந்தத் திட்டத்தில் கடன் பெற முடியும்.
இந்நிலையில் 'பிரதம மந்திரி சாலையோரக் கடை ஆத்ம நிர்பார் நிதி' திட்டத்தைக் கண்காணிக்கவும், மாநிலங்களில் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது, சிக்கல்களைத் தீர்த்துவைக்கவும் 34 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.
வீடு மற்றும் நகரப்புற மேம்பாட்டு அமைச்சகம் இந்த அதிகாரிகளுக்கான பணியை ஒதுக்கும். மேலும், ஒவ்வொரு அதிகாரியும் எந்தெந்த மாநிலத்துக்குப் பொறுப்பு உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வழங்கப்படும். இந்த 34 மூத்த அதிகாரிகளில் ஐஎஃப்எஸ் அதிகாரி நிரஞ்சன் குமார் சிங் தவிர மற்ற அனைவரும் ஐஏஎஸ் அதிகாரிகள், இணைச் செயலாளர் அந்தஸ்தில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் மாநிலத்துக்கு நிரஞ்சன் சிங், வடகிழக்கு மண்டலத்துக்கு எம்.சி ஜாஹூரி, ஹரியாணாவுக்கு நீரஜ் சேகர், பிஹார் மாநிலத்துக்கு ஹக்கும் சிங் மீனா, ராஜஸ்தான் மாநிலத்துக்கு ராஜத் குமார் மிஸ்ரா, தன்மே குமார், கேரளாவுக்கு ராஜேஸ் குமார் சின்ஹா , உத்தரப் பிரதேசத்துக்கு குமாரந் ரிஸ்வி, லீனா ஜோஹ்ரி, அமித் குமார் கோஷ், பார்த்த சாரதி சென்சர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கருக்கு அமித் அகர்வால், பஞ்சாப் மாநிலத்துக்கு ராகேஷ் குமார் வர்மா, அலக்நந்தா தயால், தெலங்கானவுக்கு ஜி.ஜெயலட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.