பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

2018-19ம் ஆண்டுக்கான வருமானவரித் தாக்கலுக்கும், ஆதார்-பான் எண் இணைப்புக்கும் காலக்கெடு நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

பிடிஐ


2018-19ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தவற்கான காலக்கெடுவை வரும் ஜூலை 31-ம் தேதிவரை நீட்டித்தும், ஆதார்-பான் எண் இணைப்புக்கான அவகாசம் வரும் 2021-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரையும் நீடித்து மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது

இதுகுறித்து மத்திய நேரடிவரிகள் வாரியம்(டிபிடிடி) நேற்று இரவு வெளியிட்டஅறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

2018-19-ம் ஆண்டுக்கான வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜூன் 30-ம் தேதி வரை வழங்கப்பட்டு இருந்தது. இது மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு, ஜூலை 31-ம் தேதிவரை அவகாசம் வழங்கப்படுகிறது. வருமானவரிச்சட்டத்தின் படி, 80சி, 80டி 80ஜி பிரிவில் முதலீடூ, மருத்துவக்காப்பீடு, நன்கொடை ஆகியவற்றை கணக்கில் காட்டி கழிவுபெறலாம்.

மேலும், 2018-19-ம் ஆண்டு அசல் மற்றும் திருத்தப்பட்ட வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவும் வரும் ஜூலை 31ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், காலதாமதமாகச் செலுத்தப்படும் வரித் தொகைக்கு விதிக்கப்படும் வட்டி 12 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக மத்திய அரசு குறைத்திருந்தது. இந்தச் சலுகை வரும் 30-ம் தேதிக்குள் செலுத்தினால் மட்டுமே பொருந்தும். அதன்பின் செலுத்தப்படும் தொகைக்குப் பொருந்தாது, 12 சதவீதம் வட்டியே செலுத்த வேண்டும்

வருமானவரிச் சட்டத்தின்படி முதலீட்டு ஆதாயம் பெறும் பிரிவு 54 முதல் 54 பி ஆகியவற்றில் முதலீடு, கட்டுமானம், சொத்து வாங்குதல் போன்றவற்றுக்கான கணக்கைத் தாக்கல் செய்து கழிவு பெறும் காலக்கெடு 2020, செப்டம்பர் 30-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது

கடந்த 2019-20 நிதியாண்டுக்கான டிடிஎஸ், டிசிஎஸ் விவரங்களை அளிப்பதற்கான காலக்கெடு வரும் ஜூலை 31-ம் தேதி வரையிலும், டிடிஎஸ், டிசிஎஸ் சான்றிதழ்களை அளிப்பதற்கான அவகாசம் ஆகஸ்ட் 15-ம் தேதிவரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது

மேலும் வரிக்கணக்கு தணிக்கை அறிக்கையும் தாக்கல் செய்ய வரும் அக்டோபர் 31-ம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டை, பான் எண்ணுடன் இணைக்கும் காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2021-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரை ஆதார்,பான் எண் இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டிருந்தது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே, குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், , வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது.

ஏற்கெனவே இந்த அவகாசத்தை கடந்த மார்ச் 31-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்திருந்தது. இந்த அவகாசம் தற்போது மேலும் 9 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT