கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறி மக்களைத் தவறாக வழிநடத்த முயன்ற யோகா குரு பாபா ராம்தேவ், பதஞ்சலி ஆயுர்வேதா மேலாண் இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி பிஹார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு முசாபர்பூர் மாஜிஸ்திரேட் முகேஷ் குமார் முன்னிலையில் வரும் 30-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் போராடி வருகின்றன. 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு, ஒவ்வொன்றும் ஒவ்வொரு கட்டத்தில் இருக்கின்றன. மருந்து கண்டுபிடித்து மக்களின் பயன்பாட்டுக்கு வருவதற்கு ஏறக்குறைய ஓராண்டு ஆகலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பதஞ்சலி நிறுவனத்தின் இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, கரோனா நோய்க்கு தங்கள் நிறுவனம் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக நேற்று அறிவித்தார். கரோனில் எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்படும் அந்த மாத்திரை, ஸ்வாசரி எனும் ஆயுர்வேத மருந்தை உட்கொண்டால் 7 நாட்களில் கரோனா நோய் குணமடையும் என்று பதஞ்சலி நிறுவனம் அறிவித்தது.
இந்த மருந்தை நூற்றுக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளுக்கு அளித்துப் பரிசோதித்ததில் அவர்கள் நோயிலிருந்து முழுமையாக குணமடைந்தாகவும் பாலகிருஷ்ணா தெரிவித்தார்.
ஆனால், இதற்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்தது. பதஞ்சலி நிறுவனம் கரோனா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளது என்றால், அதுகுறித்த தகவல்களை அமைச்சகத்துக்கு அனுப்பி அதைப் பரிசோதித்து உண்மையானது தானா என ஆய்வு செய்தபின்புதான் விளம்பரம் செய்ய வேண்டும். ஆனால், எந்தத் தகவலையும் அனுப்பாமல் விளம்பரம் செய்யக்கூடாது, அறிவிக்கக் கூடாது. உடனடியாக மருந்து குறித்த தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவித்தது.
இந்நிலையில் லட்சக்கணக்கான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களைத் தவறாக வழிநடத்தும் வகையிலும் ஏமாற்றும் வகையிலும் கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறிய பாபா ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முசாபர்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது
தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தும் தமன்னா ஹாஸ்மி என்பவர் இந்த மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இந்தப் புகாரில், “பாபா ராம்தேவ், பதஞ்சலி நிறுவன இயக்குநர் பாலகிருஷ்ணா ஆகியோர் மக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் கரோனா தடுப்பு மாத்திரை கண்டுபிடித்துள்ளதாகக் கூறியுள்ளார்கள். விளம்பரத்தை நிறுத்தக் கோரி மத்திய ஆயுஷ் அமைச்சகமும் உத்தரவிட்டுள்ளது. இதுவரை மருந்து குறித்த எந்தத் தகவலையும் ஆயுஷ் அமைச்சகத்துக்கு பதஞ்சலி நிறுவனம் அனுப்பி வைக்கவில்லை.
ஆதலால் மக்களை ஏமாற்றும் வகையில் செயல்பட்ட பதஞ்சலி நிறுவனத்தின் இயக்குநர் பாலகிருஷ்ணா, பாபா ராம்தேவ் ஆகியோர் மீது ஐபிசி 420, 120பி, 270 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு வரும் 30-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.