கரோனா நோய் அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு கரோனாவுக்கான பரிசோதனை தேவையில்லை என்று தெலங்கானா சூப்பர் ஸ்பெஷாலிட்டி கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.
ஏன் தேவையில்லை என்பதற்கு அந்தக் கூட்டமைப்பு, ’நோய்க்குறிகள் இல்லாதவர்கள் வீட்டிலேயே தங்கள் நோய் தடுப்புச் சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம் என்கிறது.
இது தொடர்பாக தெலங்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர். பாஸ்கர் ராவ் கூறும்போது, “கோவிட்-19 அபாயகரமான நோயல்ல. அதற்கான ஒரே தீர்வு சமூக இடைவெளியும், சுத்தம் சுகாதாரத்தைப் பராமரித்தலுமே ஆகும்” என்றார்.
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியதாவது:
கோவிட்-19 குறித்த விழிப்புணர்வை மேற்கொள்ளவிருக்கிறோம். இதனை எப்படித் தவிர்ப்பது, அல்லது தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்பது குறித்து மக்களிடம் எடுத்துச் செல்வோம்.
இது அபாயகரமான நோயல்ல. ஆனால் நாம் ஏன் பயப்படுகிறோம் என்றால் இதன் பரவும் வேகத்தினாலும் தொற்றும் தன்மையினாலும்தான்.
இதற்கு ஒரே தீர்வு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தலும் முகக்கவசம் அணிவதும், அடிக்கடி கையை சோப்பால் கழுவுவதுமே. அதே போல் பிறர் தும்மும் போதும், இருமும் போதும் தூரம் கடைப்பிடிப்பது அவசியம்.
நோய் அறிகுறிகள் இல்லாதவர்களில் 98% பேருக்கு கரோனா டெஸ்ட் தேவையில்லை.
3 விதங்களில் கரோனா நோயாளிகளை வகைப்படுத்தலாம். நோய் அறிகுறிகள் இல்லாதவர்கள்- இவர்கள் 98%, மருத்துவமனைக்கு வர தேவையில்லை, டெஸ்ட்டும் தேவையில்லை. இவர்கள் வீட்டிலிருந்தே உப்புக்கரைசல் கொப்புளித்தல், நீராவிபிடித்தல், ஆகியவற்றின் மூலம் நோய் தடுப்பாற்றலை வளர்த்தெடுக்கலாம்.
இரண்டாவது வகை, மிதமான நோய்க்குறிகள் உள்ளவர்கள், மருத்துவமனை அனுமதிக்க வேண்டிய தேவையற்றவர்கள், ஆனால் மருத்துவ ஊழியர்களுடன் சீரான முறையில் தொடர்பில் இருக்க வேண்டியவர்கள்.
3வது வகையினர் தீவிர தொற்று அறிகுறிகள் ஏற்பட்டு வெண்ட்டிலேட்டர் உதவி தேவையோ, தேவையில்லாமலோ மருத்துவமனையின் அனுமதி வேண்டுபவர்கள். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோயாளிகள், நுரையீரல் நோயுள்ளவர்கள் ஆகியோர் மருத்துவமனையில் சில மாதங்கள் இருக்க நேரிடும்.
நாங்கள் அரசு நிர்ணயித்த கட்டணங்களில்தான் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கிறோம். ஒரு சிலருக்கு ஸ்பெஷல் அறை கேட்பார்கள், சில சிறப்பு வசதிகள், கூடுதல் வசதிகள் கேட்பார்கள் அவர்கள் கூடுதல் பணம் செலுத்தத் தயாராக இருக்க வேண்டும்.. ஒரு லட்சம் என்பது ஒரு நாளுக்கான கட்டணம் அல்ல. ஒட்டுமொத்த சிகிச்சைக்குமான தொகை.
130 கோடி மக்களுக்கும் டெஸ்ட் என்பது சாத்தியமல்ல. இன்றைக்கு டெஸ்ட் எடுக்கிறோம் நெகெட்டிவ் என்று வருகிறது என்பதற்காக மீண்டும் டெஸ்ட் எடுக்காமல் இருக்க முடியாது, ஏனெனில் இன்று நெகெட்டிவ் நாளைய பாசிட்டிவ் ஆக மாற வாய்ப்புள்ளது.
இவ்வாறு கூறுகிறார் டாக்டர் பாஸ்கர் ராவ்.