சளி, காய்ச்சல் மருந்து என்ற அடிப்படையிலேயே பதஞ்சலி மருந்துக்கு உரிமம் வழங்கினோம் என உத்தரகண்ட் அரசு விளக்கம் அளித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்புக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆயுர்வேத மருந்து கண்டுபிடித்துள்ளதாக பதஞ்சலி ஆயுர்வேதா லிமிட்டெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா நேற்று அறிவித்தார்.
கரோனா பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேலான நோயாளிகளுக்கு இந்த ஆயுர்வேத மருந்தைக் கொடுத்து பரிசோதனை செய்ததாகவும், அவர்கள் அனைவரும் 100 சதவீதம் நோயில் இருந்து குணம் அடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நோய் தொற்று இருப்போர் இந்த ஆயுர்வேத மருந்தை எடுத்துக் கொண்டதன் மூலம் 5முதல் 14 நாட்கள் என்ற அளவில் குணமடைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பானது பல நிலைகளில் உள்ளது.அஸ்ட்ராசெனகா, ஃபைசர், ஜான்சன் அண்ட் ஜான்சன், மெர்க்,மாடர்னா, சனோஃபி மற்றும் சீனாவின் கன்சினோ பயாலஜிக் ஆகிய நிறுவனங்கள் தாங்கள் கண்டுபிடித்துள்ள மருந்தை கரோனா நோயாளிகளுக்குக் கொடுத்து பரிசோதித்து வருகின்றனர்.
அதேசமயம் மகாராஷ்டிர அரசு ஆர்செனிக் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்தை கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.
ஆனால், பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் கரோனா பாதிப்புக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறும் நிலையில் அதுபற்றி தகவல்களை அளிக்க வேண்டும் எனவும், அதுபற்றி விளம்பரங்கள் செய்ய வேண்டாம் எனவும் ஆயுஷ் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் விரைவில் கோவிட் சிகிச்சைக்கான மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறப்படும் மருந்தின் பெயர், மூலக்கூறுகள், கோவிட்-19 சிகிச்சை ஆய்வு/ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட இடங்கள்/மருத்துவமனைகள், அதற்கான ஒப்பந்தங்கள், விதிமுறைகள், ஆய்வு மாதிரி அளவு, இன்ஸ்டிடியூஷனல் எதிக்ஸ் கமிட்டி ஒப்புதல்; CTRI பதிவு, ஆராய்ச்சி/ஆராய்ச்சிகளின் புள்ளிவிவர முடிவுகள் ஆகியவற்றை அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து உத்தரகண்ட் மாநில ஆயுர்வேத நிறுவனத்தின் உரிமம் வழங்கும் அலுவலர் கூறியதாவது:
பதஞ்சலி நிறுவனம் அளித்த விண்ணப்பத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து எனக் குறிப்பிடவில்லை. சளி மற்றும் காய்ச்சல் மருந்து எனவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. அதனடிப்படையிலேயே நாங்கள் அவர்களுக்கு உரிமம் வழங்கினோம். கரோனா வைரஸுக்கு மருந்து எனக் கூறிவருவது குறித்து தற்போது நாங்கள் அவர்களுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.