காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம் 
இந்தியா

கரோனா பரவலையும், பெட்ரோல்- டீசல் விலை உயர்வையும் கட்டவிழ்த்துவிட்ட மத்திய அரசு: வரைபடம் வெளியிட்டு ராகுல் காந்தி விமர்சனம்

பிடிஐ

கரோனா வைரஸ் பரவலையும், பெட்ரோல்- டீசல் விலை உயர்வையும் மத்திய அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். லாக்டவுன் காலத்தில்கூட கரோனா வைரஸ் எவ்வாறு வேகமாகப் பரவியது என்பது குறித்த வரைபடங்களை வெளியிட்டு விமர்சித்திருந்தார்.

இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொன்மொழி ஒன்றைக் குறிப்பிட்டு சமீபத்தில் ட்விட்ரில் கருத்து தெரிவித்திருந்த ராகுல் காந்தி, “ கரோனா லாக்டவுனால் நாட்டின் பொருளாதாரம் மோசமாக வீழ்ச்சி அடைந்தது. லாக்டவுன் இதைத்தான் நிரூபிக்கிறது. ஒரே விஷயம்தான், அறியாமையைவிட அகங்காரம் மிகவும் ஆபத்தானது” எனத் தெரிவித்திருந்தார்.

கரோனாவைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுனில் நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிட்டது. அதேசமயம் கரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 7-ம் தேதி முதல் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 17-வது நாளாக விலை அதிகரிப்பால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.10.49 பைசாவும் அதிகரித்துள்ளது.

பெட்ரோல் - டீசல் விலை அதிகரிப்பு, கரோனா பாதிப்பு அதிகரிப்பைக் காட்டும் வரைபடம்: படம் உதவி | ட்விட்டர்

அதேசமயம் நாட்டில் கரோனா வைரஸ் பரவலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றை நிலவரப்படி, இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 14 லட்சத்து 56 ஆயிரத்து 183 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 465 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து, ஒட்டுமொத்த உயிரிழப்பு 14 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அரசை விமர்சித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து, வரைபடத்தையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், “மத்தியில் ஆளும் மோடி அரசு, கரோனா வைரஸ் பரவலையும், பெட்ரோல்-டீசல் விலை உயர்வையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. லாக்டவுனுக்குப் பின் கரோனா வைரஸ் பாதிப்பு மட்டும் நாட்டில் நாள்தோறும் உயரவில்லை. பெட்ரோல் - டீசல் விலையும் உயர்ந்து வருகிறது” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT