யோகா குரு பாபா ராம்தேவ் கரோனா வைரஸ் சிகிச்சைக்காக செவ்வாயன்று ‘கரோனில் மற்றும் ஸ்வாசரி’ என்ற ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்த சில மணி நேரங்களில் இந்த மருந்தின் விளம்பரங்களை நிறுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டதோடு , நிறுவனம் கோரிய ‘வெற்றிகரமான சோதனை மற்றும் சிகிச்சை’ என்பதற்கான விவரங்களையும் வெளியிட அறிவுறுத்தியுள்ளது.
இந்த மருந்துகளை நோயாளிகளுக்கு கொடுத்துப் பார்த்ததில் சாதகமான பலன்கள் கிடைத்ததாக பதஞ்சலி நிறுவனம் கோருகிறது.
இது தொடர்பாக ஆயுஷ் அமைச்சகம் ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி ஆயுர்வேத கோவிட்-19 சிகிச்சை குறித்த செய்திகளை கவனமேற்கொண்டதாகவும், நிறுவனம் மருந்தின் பலன்களுக்கு உரிமை கோரும் முடிவுகளும், தரவுகளும் அதன் விஞ்ஞான் அடிப்படையும் அமைச்சகத்திடம் தெரிவிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
விவரங்கள் பட்டியல்:
மருந்தின் பெயர், உள்ளிடப்பட்ட மருந்துப் பொருட்களின் சேர்க்கை விவரம், எந்த மருத்துவமனையில் யார் யாரிடம் இந்த மருந்து சோதனை செய்யப்பட்டது, நடைமுறை, சாம்பிள் அளவு, நிறுவன அறவியல் கமிட்டி அனுமதி, கிளினிக்க சோதனை பதிவு விவரம், ஆய்வின் முடிவு தரவுகள் ஆகியவற்றைக் கேட்டுள்ளதோடு, முடிவுகள் தெளிவுபடுத்தப்படும் வரை இந்த மருந்துக்கான விளம்பரங்களை உடனடியாக நிறுத்தவும் ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் உத்தராகண்ட் மாநிலத்தின் சம்பந்தப்பட்ட மருந்து உரிம ஆணையத்திடம் இதற்கான உரிமம் வழங்கிய நகல்கள், மருந்து அனுமதி ஆவணங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளது.
‘100 நோயாளிகள்’
இதற்கிடையே இந்த மருந்தை ஆய்வு செய்த மருத்துவ ஆய்வாளர்கள் தரப்பில் இன்னும் முடிவுகளை வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிக்கப்பட்ட 100 நோயாளிகளை இந்த மருந்துக்கான சோதனைக்காகத் தேர்வு செய்துள்ளனர். இதில் 50 பேருக்கு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது, 5 பேர் பாதியிலேயே சோதனையிலிருந்து விலகியுள்ளனர். மீதி 50 பேருக்கு பிளாசிபோ முறையான மனோவியல் ரீதியாக இந்த மருந்து அளிக்கப்பட்டுள்ளது.
-தி இந்து ஆங்கிலம், பிந்து ஷாஜன் பெரப்படன், ஜேக்கப் கோஷி