இந்தியா

தீவிரமடையும் படேல்கள் போராட்டம்: வங்கிகளிலிருந்து பணம் எடுப்பு

மகேஷ் லங்கா

இட ஒதுக்கீடு கோரும் படேல்கள் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி தீவிரப்படுத்தப் படுகிறது. அதாவது இந்த மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்லும் போது நியூயார்க்கில் மிகப்பெரிய அளவில் பேரணி ஒன்றை நடத்த தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

படேல்கள் போராட்டத்தை சுமுகமாகத் தீர்க்க அதன் தலைவர்களை சந்திக்கும் குஜராத் அரசின் சமாதான முயற்சிகள் பயனளிக்காத நிலையே தற்போது ஏற்பட்டுள்ளது.

போராட்டத்துக்காக பெரிய அளவில் வங்கிகளிலிருந்து பணத்தை எடுப்பது, சிறிய ஊர்கள் மற்றும் கிராமங்களில் பெண்கள் போராட்டத்தை தீவிரப் படுத்துவது உட்பட பல்வேறு திட்டங்களை படேல்கள் கைவசம் வைத்துள்ளனர்.

இதுபற்றி 65 வயது பிரஹலாதபாய் படேல் கூறும்போது, “தற்போதைய இட ஒதுக்கீட்டு முறையில் உள்ள அநீதிக்கு எதிராக போராடுகிறோம். எங்களது போராட்டத்தை ஆதரிக்க எனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.3 லட்சம் தொகையை எடுத்துள்ளேன், பிற பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் மற்ற சமுதாயத்தினர் அனுபவத்திடும் அதே பயன் எங்களுக்கும் கிடைக்க வேண்டும்” என்றார்.

"எங்களது சமூகத்தினரில் நூற்றுக் கணக்கானோர் இந்தப் போராட்டத்துக்காக தங்களது வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை எடுக்கத் தொடங்கிவிட்டனர். பட்டான், சபர்கந்தா, வதோதரா, பனஸ்கந்தா மாவட்ட வங்கிக் கிளைகளிலிருந்து டெபாசிட் செய்த தொகைகளை எடுத்து வருகிறோம்" என்கிறார் சர்தார் படேல் குழுவைச் சேர்ந்த வருண் படேல்.

அவர் மேலும் கூறும்போது, “ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க நியூயார்க் செல்லும் போது, செப்டம்பர் 25-ம் தேதி ஐநா அருகே பெரிய பேரணி நடத்த அமெரிக்க அதிகாரிகளிடம் அனுமதி பெற்று விட்டோம். வெள்ளை டி-சர்ட் அணிந்து சுமார் 10,000 படேல்கள் பேரணியில் ஈடுபடுவர். அதேபோல் போராட்டத்தின் போது நடந்த போலீஸ் அராஜகம் குறித்தும் கோஷம் எழுப்பவுள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT