சீனாவுடன் எல்லையில் பிரச்சினை ஏற்பட்டு பெரிதாக வளர்ந்ததற்கு மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் தவறான கொள்கைகளும், தவறான நிர்வாகமுமே காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் அந்த கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று காணொலி வாயிலாக நடந்தது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், கபில் சிபல், குலாம் நபி ஆசாத்,ஏ.கே.அந்தோணி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் இந்தியா சீனா எல்லைப்பிரச்சினை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கரோனா வைரஸ் பரவலை மத்திய அரசு கையாளும் விதம், புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன. சீன ராணுவத்துடனான மோதலில் வீரமரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபு உள்பட 20 இந்திய வீரர்களுக்கு இந்தக் கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த கூட்டத்தில் பேசியதாவது:
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு மக்கள் மீது சிறிதுகூட கருணையில்லாமல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தபோதிலும் கூட தொடர்ந்து 17-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது.
நாட்டில் கரோனா வைரஸ் பரவல் தடுக்கும் நடவடிக்கைகளை நரேந்திர மோடி அரசு தவறாக கையாண்டுவிட்டது, வரலாற்றில் பேரழிவுதரக்கூடிய தோல்வியாக இது பதிவு செய்யப்படும்.
துரதிர்ஷ்டம், இக்கட்டான சூழல் என்பது தனியாகவரவில்லை.ஒருபுறம்கரோனா வைைரஸ் பரவல், மற்றொரு பக்கம் மோசமான பொருளாதாரச் சிக்கலால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர எல்லையில் சீனா ராணுவத்துடன் இந்திய ராணுவம் மோதலால் பிரச்சினை பெரிதாகியுள்ளது. ஒவ்வொரு பிரச்சினையுமே மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தவறான கொள்கையாலும், தவறான நிர்வாகத்தாலும் வந்தவையாகும்
எல்லை விவகாரத்தில் எதிர்காலம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் முதிர்ச்சியடைந்த ராஜதந்திர நடவடிக்கை மற்றும் தீர்க்கமான தலைமை எங்கள் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளைத் தெரிவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மறுக்கமுடியாத உண்மை என்னவெனில் 2020, ஏப்ரல் முதல் மே மாதம் வரை சீன வீரர்கள் நம்முடைய எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள பாங்காங் ஏரியில் அத்துமீறி நுழைந்துள்ளனர். ஆனால், இதை மத்திய அரசு மறுக்கிறது.
இந்த ஊடுருவல் கடந்த மாதம் 5ம் தேதி நடந்துள்ளது, அதன்பின் சூழல் மோசமாகியதால்தான் கடந்த 15 16-ம் தேதிகளில் இரு ராணுவத்துக்கும் இடையே மோதல் நடந்துள்ளது
எல்லை விவகாரத்தில் அனைத்து நடவடிக்கைக்கும் மத்திய அரசுக்கும், ராணுவத்துக்கும் ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் முதன்முதலில் அறிவித்தது. மத்திய அரசு சீனாவுடன் எல்லைப் பிரச்சினையை தவறாகக் கையாள்வதாக மக்கள் மத்தியில் பெரிய அச்சம் நிலவுகிறது.
எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைதியும், நிலைத்தன்மையும், பழைய முறை மீண்டும் திரும்பி வரவும், தேச நலனுக்குரிய கொள்கைகளின் வழிகாட்டல்படி நடக்க மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம். எல்லைப்பிரச்சினையை நாங்கள் உன்னிப்பாகத் தொடர்ந்து கண்காணிப்போம்.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் மத்திய அரசிடம் போதுமான மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பது வெளிவந்துவிட்டது. கரோனா வைரஸ் பரவல் பிரச்சினை தீவிரமானதும், சுமையை மாநில அரசுகள் மீது மத்திய அரசு சுமத்திவிட்டது, ஆனால், எந்தவிதமான நிதியும் அளிக்கவில்லை.
உண்மையில், மக்கள் தங்களைத் தாங்களே கரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அனைத்து அதிகாரங்களையும் பிரதமர் மோடி கையில் வைத்திருப்பதால் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது
கரோனாவைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் பொருளாதார சூழல் மோசமடைந்துள்ளது. ஆனால் பொருளாதாரத்தை சீரமைக்க வல்லுநர்கள் அளிக்கும் நல்ல அறிவுரைகளை மோடி அரசு ஏற்க மறுக்கிறது.
இந்த இக்கட்டான நேரத்தில் மிகப்பெரிய அளவில் நிதி உள்ளீடுகளை மக்களிடத்தில் அளிக்க வேண்டும். மக்களிடம் நேரடியாக பணத்தை வழங்க வேண்டும், குறு,சிறு,நடுத்தர நிறுவனங்கள் அழிந்துவிடாமல் காக்க வேண்டும், அவற்றுக்கு தேவையான கடனுதவியை வழங்கிட வேண்டும். ஆனால் ஜிடிபியில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே மத்திய அரசு நிதித்தொகுப்பை அறிவித்துள்ளது. 42 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ளது.
அதிகரி்த்து வரும் வேலையின்மை, குறைந்துவரும் வருமானம், கூலி, முதலீட்டு குறைவு ஆகியவற்றால் நான் அச்சமடைகிறேன், இதிலிருந்து மீள்வதற்கு நீண்ட காலம் ஆகும்.மத்திய அரசு தனது தவற்றை உணர்ந்து திருத்திக்கொண்டு, வலிமையான பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தினால்தான் மீள முடியும்
இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார்