காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம் 
இந்தியா

இந்திய எல்லையை சீனா ஆக்கிரமித்துள்ளதா? மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி

பிடிஐ

இந்திய எல்லையை சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ளதா என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த வாரம் திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல சீனா தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிட மறுக்கிறது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக மத்திய அரசைத் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்துவருகிறார். மத்திய அரசு தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படவில்லை என்றும், சீனா திட்டமிட்டு இந்திய ராணுவ வீரர்களைக் கொலை செய்துள்ளது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டில், “பிரதமர் இந்தியப் பகுதியை சீன ஆவேசத்துக்கு ஒப்படைத்துவிட்டார். அந்த நிலப்பகுதி சீனாவுடையது என்றால் 1. ஏன் நம் வீரர்கள் கொல்லப்பட வேண்டும்? 2. எங்கு அவர்கள் கொல்லப்பட்டார்கள்?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார்

ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட ஏரியின் புகைப்படம்

கடந்த ஞாயிறன்று ராகுல் காந்தி ஜப்பான் டைம்ஸ் நாளேட்டின் கட்டுரையை தனது ட்வி்ட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதில், “பிரதமர் நரேந்திர மோடி உண்மையில் சரண்டர் மோடி” எனச் சாடினார். மேலும், சீன ஊடகமான குலோபல் டைம்ஸ் நாளேடு பிரதமர் மோடியை புகழக் காரணம் என்ன என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் சோ ஏரியின் புகைப்படத்தை பதிவிட்டு மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இந்த ஏரியின் புகைப்படம், ராகுல் காந்தியின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி எடுத்த புகைப்படமாகும்.

அந்தப்புகைப்படத்தை ராகுல் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “ சீனாவின் ஆவேத்துக்கு எதிராக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து நிற்போம். இந்தியாவின் எல்லைப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதா” என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்

SCROLL FOR NEXT