இந்தியா

கிருஷ்ணா - கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டத்தை தொடங்கினார் சந்திரபாபு நாயுடு

என்.மகேஷ் குமார்

கோதாவரி நதியில் இருந்து கடலில் வீணாகக் கலக்கும் நீரை கிருஷ்ணா நதியுடன் இணைக்கும் திட்டத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் ஆந்திராவில் நதிநீர் இணைப்பு திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

கிருஷ்ணா மாவட்டம் இப்ரஹிம் பட்டினத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் தாடிபூடி அணைக்கட்டில் உள்ள கோதாவரி நீர் போலாவரம் வலது குடிநீர் திட்ட கால்வாய்க்கு பம்பிங் மூலம் அனுப்பப்படுகிறது. இந்த நீர், வெலுகலேரு கிராமம் அருகே உள்ள பலே ராவ் ஏரியில் கலக்கிறது. பின்னர் இந்த நீர் புடிமேரு குடிநீர் திட்ட கால்வாய்க்கு அனுப்பப்படுகிறது.

அதன் பின்னர் இந்த நீர், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள இப்ரஹிம் பட்டினம் பகுதியில் கிருஷ்ணா நதியில் சங்கமிக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் தற்போது கட்டப்பட்டு வரும் பட்டிசீமா அணைக்கட்டு வழியாக ராயலசீமா மாவட்டங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படும். இதனால் ராயலசீமாவில் தண்ணீர் பஞ்சம் குறையும் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் வறட்சிப் பகுதிகளுக்கு நீர்ப்பாசன வசதி ஏற்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.

SCROLL FOR NEXT