இந்தியா

அன்று பிளேக் தொற்று; இன்று கரோனா வைரஸ்- கட்டுப்படுத்த திணறும் அரசாங்கம்

என்.மகேஷ்குமார்

நம் நாட்டில் தற்போதைய கரோனா தொற்றைப் போல ‘கொள்ளை நோய்’ என்றழைக்கப்பட்ட, பிளேக் தொற்றுக்கு ஒரு காலத்தில் மக்கள் பயந்து நடுங்கினர். இந்நோய்க்கு ஏராளமானோர் உயிரிழந்தனர். இப்போது போலவே அப்போதைய அரசும் பிளேக் தொற்றை கட்டுப்படுத்த திணறியது. மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் நோய் முற்றிலும் குணமடைய சுமார் 20 ஆண்டுகள் ஆனது.

நம் நாட்டில் தற்போது 4.25 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளது. இதில் 1.32 லட்சம் நோயாளிகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இந்த நோயாளிகளில் பாதி பேர் மும்பை சேர்ந்தவர்கள் ஆவர். நாட்டில் 1896-ம் ஆண்டில் பிளேக் தொற்று பரவியபோதும் மும்பையில் தான் அதிகம் பரவியது. இதனால் இப்போது போலவே அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சியிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஆங்கிலேயர் காலத்தில் மும்பையை பெரு நகரமாக உருவாக்க தீர்மானிக்கப்பட்டது. முதலில் அங்கு பெரும் பணக்காரர்களே அதிகமாக இருந்தனர். பின்னர், ஒவ்வொரு தொழிற்சாலைகளாக அமையத் தொடங்கியது. பெரும் வணிக மையமாக மும்பைஉருவானது. இங்குள்ள தொழிற்சாலைகள், துறைமுகங்களில் பணியாற்ற பலர் மும்பைக்கு வந்தனர். 1891 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மும்பையில் 8.20 லட்சம் பேர் வசித்தனர். இதில் 70 சதவீத தொழிலாளர்கள் குடிசைப் பகுதிகளில் வசித்தனர். 1890-ம் ஆண்டு சீனாவில் பிளேக் நோய் தீவிரமாக பரவியது.

அதுவும் சீனாவில் இருந்து

1894-ல் ஹாங்காங்கில் இந்நோய் பரவத் தொடங்கியது. அப்போது, மும்பை-ஹாங்காங் இடையே கப்பல்கள் மூலம் வர்த்தகப் பரிமாற்றம் அதிகமாக இருந்தது. இதில் கப்பல்கள் மூலமாக மும்பை வந்த எலிகள் நகரத்துக்குள் நுழைந்தன. மழைக்காலம் என்பதாலும் குடிசைப் பகுதிகள் அதிகம் இருந்ததாலும் பிளேக் தொற்று மும்பையில் வேகமாகப் பரவியது. 1896-ம் ஆண்டு நம் நாட்டில் முதல் பிளேக் நோயாளி மும்பையில் உள்ள மாண்ட்வி பகுதியில் கண்டறியப்பட்டார். இதையடுத்து பிளேக் நம் நாட்டில் வேகமாக பரவத் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து அப்போதைய ஆங்கிலேய அரசு வீட்டுக்குவீடு கணக்கெடுப்பு நடத்தியது. நோயாளிகளை தனிமைப்படுத்துவது, வீட்டில் அடைத்து வைப்பது, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பிளேக் தொற்று அறிகுறி இருக்கும் அனைவரையும் கண்டறிந்து மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். நோயாளியின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தினர். பிளேக் அதிகமாக இருக்கும் இடங்களில் வீடுகளை காலி செய்து, அவற்றை கிருமி நாசினியால்சுத்தப்படுத்தினர். ஆங்கிலேயர் அரசை போன்றே தற்போதைய மகாராஷ்டிர அரசும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கரோனா தொற்று அதிகமாக உள்ள தாராவியில் அதிகாரிகள் வீடு வீடாக சென்று சர்வே நடத்தினர். இதில் தொற்று இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

20 ஆண்டு போராட்டம்

பிளேக் பாதிப்பின்போதும் மும்பையில், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப வலியுறுத்தி பாந்த்ரா ரயில்நிலையம் அருகே தீவிரமாகப் போராடினர். ரயில் தண்டவாளம், நடைப்பயணமாக பலர் சொந்த ஊருக்குப் புறப்பட்டனர். இவர்கள் மூலம் பிளேக் நோயும் நாடு முழுவதும் பரவியது. இதைத் தொடர்ந்துசிறிது காலத்துக்கு பிறகு வால்டெமர் ஹாஃப்கின் என்ற மருத்துவர்பிளேக் நோய்க்கு மருந்து கண்டு பிடித்தார். பின்னர் இது மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. என்றாலும் பிளேக் நோய் முற்றிலுமாக ஒழிய 20 ஆண்டுகள் ஆனது.

தற்போது கரோனாவும் பிளேக் நோயை போலவே தீவிரமாகப் பரவி வருகிறது. இதற்கும் மருந்து கண்டுபிடித்தாலும் இதன் தாக்கம் முழுமையாக மறைய சில ஆண்டுகள் ஆகலாம். அதுவரை நாம் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது அவசியமாகிறது.

SCROLL FOR NEXT