இந்தியா

அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் ரஷ்யா பயணம்

செய்திப்பிரிவு

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 3 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று ரஷ்யா புறப்பட்டுச் சென்றார்.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிராக சோவியத் ரஷ்யா வெற்றி பெற்றதன் 75-வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் மாஸ்கோவில் வெற்றி விழா நடக்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று மாஸ்கோ புறப்பட்டுச் சென்றுள்ளார்.

கடந்த பிப்ரவரி 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ரியாத்தில் நடந்த ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அதன்பிறகு கரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரதமர் மோடி உட்பட யாரும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், 4 மாதங்களுக்குப் பிறகு மத்திய அமைச்சர் ஒருவர் வெளிநாடு சென்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளி யிட்டிருந்த செய்திக்குறிப்பில், ‘இரண்டாம் உலகப் போரில் ரஷ்யா வெற்றி பெற்றதன் 75-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், ஜூன் 24-ம் தேதி மாஸ்கோவில் வெற்றி அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அமைச்சரின் இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால உறவை பலப்படுத்தும்’ என கூறப்பட்டிருந்தது.

வெற்றி அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைகளைச் சேர்ந்த 75 வீரர்கள் ஏற்கெனவே மாஸ்கோ சென்றுள்ளனர்.

ரஷ்யாவுக்கு புறப்படும் முன்பு ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மூன்று நாள் பயணமாக மாஸ்கோவுக்கு செல்கிறேன். இந்தியா - ரஷ்யா இடையே பாதுகாப்புத் துறையில் உள்ள ஒப்பந்தங்களை மேம்படுத்துவதற்கு இந்த பயணம் ஒரு வாய்ப்பாக அமையும்’ என பதிவிட்டுள்ளார்.- பிடிஐ

SCROLL FOR NEXT