இந்தியா

பூரி ஜெகநாதர் ரத யாத்திரை நடத்த 3 அமைச்சர்கள்: ஒடிசா முதல்வர் பட்நாயக் அறிவிப்பு

செய்திப்பிரிவு

பூரி ஜெகநாதர் ரத யாத்திரையை நடத்த மாநில அரசும், கோயில் நிர்வாகமும் முழு அளவில் தயாராகி வருவதாகவும் இதற்காக 3 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறினார்.

ஒடிசா மாநிலத்தின், கடற்கரை நகரான பூரியில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெகந்நாதர் கோயில் புகழ்பெற்றது. இங்கு மூலவர்களாக பாலபத்ரா, அவரின் சகோதரர் ஜெகந்நாதர், சகோதரி தேவி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உடன் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மூலவர்களுக்குப் புதிய தேர் செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் ஜெகந்நாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா ஆகியோர் 2 கி.மீ. தொலைவில் உள்ள தங்களின் அத்தை கோயிலான மவுசிமா கோயிலுக்குச் சென்று ஓய்வு எடுப்பார்கள்.

அங்கிருந்து 9-வது நாள் மீண்டும் புறப்பட்டு பூர்வீக இடத்துக்குத் திரும்புவார்கள். மிக நீண்ட தெருக்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களையும் இழுக்கும் வைபவம் படாதண்டா என்று அழைக்கப்படுகிறது. 10 நாட்கள் இந்தத் திருவிழா நடக்கும்.

இந்தப் புகழ்பெற்ற தேரோட்டத் திருவிழா (நாளை) 23-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடந்துவந்தன.

ஆனால், ஒடிசாவைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான ஒடிசா விகாஸ் பரிஷத் எனும் அமைப்பு, கரோனா பரவும் நேரத்தில் இந்தத் திருவிழாவை நடத்த அனுமதித்தால் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு மேலும் கரோனா பரவல் தீவிரமாகும். ஆதலால், தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தை இந்த ஆண்டு நடத்தத் தடை விதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, “ஜெகந்நாத் சன்ஸ்குருதி ஜனா ஜகரனா மஞ்ச்” எனும் அமைப்பும், அப்தாப் ஹூசைன் என்பவரும் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்து, இந்தத் தேரோட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும். முந்தைய தடை உத்தரவை நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்தச் சூழலில் பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தை பக்தர்கள் இல்லாமல் நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் துஷார் மேத்தா, ஒடிசா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே ஆகியோர் ஆஜராகினர்.

இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, தினேஷ் மகேஸ்வி, ஏஎஸ்.போபண்ணா ஆகியோர் முன்னிலையில் காணொலி மூலம் இன்று விசாரிக்கப்பட்டது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே பிறப்பித்த உத்தரவில், “பூரி ஜெகந்நாதர் தேரோட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது.

மக்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு ஒடிசா அரசு, மத்திய அரசு, கோயில் நிர்வாகம் இணைந்து சுமுகமாக நடத்திக் கொள்ள வேண்டும்.’’ எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து தேரோட்ட பணிகளை ஒடிசா அரசு தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறியதாவது:

பூரி ஜெகநாதர் ரத யாத்திரையை நடத்த அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றத்திற்கு எங்களது நன்றி. முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் மத்திய அரசுக்கும் எங்கள் மாநிலத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பூரி ஜெகநாதர் ரத யாத்திரையை நடத்த மாநில அரசும், கோயில் நிர்வாகமும் முழு அளவில் தயாராகி வருகிறது. இதற்காக 3 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்த பணிகளை ஒருங்கிணைப்பார்கள்.
இவ்வாறு நவீன் பட்நாயக் கூறினார்.

SCROLL FOR NEXT